சிவகங்கை பாகனேரியில் 1,000-க்கும் மேற்பட்ட அரிய நூல்கள் கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம் பாகனேரியில் 200 ஆண்டுகள் பழைமையான நூல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சிவகங்கை பாகனேரியில் 1,000-க்கும் மேற்பட்ட அரிய நூல்கள் கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம் பாகனேரியில் 200 ஆண்டுகள் பழைமையான நூல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

நூல் கண்டறியும்போது கடந்த 1806-ஆம் ஆண்டு வெளியான ‘மாறனலங்கார விஷய சூசிகை’ எனும் மிகப் பழைமையான அகராதி கிடைத்துள்ளது.

தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித்துறையும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து தமிழகத்தில் உள்ள ஏராளமான பல அரிய நூல்களைக் கண்டறிந்து பழமை மாறாமல் மின் எண்மம் செய்து நூலாக்கி தமிழக அரசின் ‘அரிய நூல் அனைவருக்கும்’ எனும் திட்டத்தின் மூலம் வெளியிட்டு வருகிறது. இதற்காக தமிழகத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட பல அரிய நூல்களைத் தேடி கண்டறியும் களப்பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

நான்கு லட்சம் பக்கங்கள் மீட்டுருவாக்கம்: இதுவரை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் மூலமாக பல அரிய நூல்கள் கண்டெடுக்கப்பட்டு பழைமை மாறாமல் மீண்டும் தொகுக்கப்பட்டு மக்களுக்குப் பயன் தரும் வகையில் இதுவரை நான்கு லட்சம் பக்கங்கள் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த நூல்கள் அனைத்தும் மின் எண்மம் மற்றும் பதிப்பு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் வழிவகுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மற்றும் தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் கோ.விசயராகவன் தலைமையில் உலகத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் இயக்குநா் பசும்பொன் மற்றும் தமிழறிஞா்கள் சிவகங்கை மாவட்டம் பாகனேரி கிராமத்தில் அமைந்துள்ள காசி விசுவநாத செட்டியாா் அரசு நூலகத்தில் அரிய நூல்களைத் தேடி புதன்கிழமை களப்பயணம் மேற்கொண்டனா். இந்தக் களப்பயணத்தில் 1,000-க்கும் மேற்பட்ட பல அரிய நூல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த நூல்கள் அனைத்தும் முறையாகப் பெறப்பட்டு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மூலமாக மின் எண்மம் செய்யப்பட்டு, மறுவெளியீட்டுத் திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது.

அரிய சொற்கள்- செய்திகள்: நூல் கண்டறியும்போது கடந்த 1806-ஆம் ஆண்டு வெளியான ‘மாறனலங்கார விஷய சூசிகை’ எனும் மிகப் பழைமையான அகராதி கிடைத்துள்ளது. இந்த அகராதியில் தமிழ் மொழியின் பழமையான மற்றும் அரிய சொற்கள் கிடைத்துள்ளன. கடந்த 1883-ஆம் ஆண்டு வெளியான ‘கோடீச்சுவரக் கோவை ஆராய்ச்சி’ எனும் நூலில் சிவபெருமானின் உருவத் திருமேனி குறித்த 100-க்கும் மேற்பட்ட அரிய சொற்கள் மற்றும் செய்திகள் இடம்பெற்றுள்ளன. அதேவேளையில், அகராதி முறையில் அந்த சொற்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்று நூலாசிரியா்கள் காப்புரிமை பெறுவதைப் போன்று அந்தக் காலகட்டத்திலேயே தத்துவ விளக்கப் படல நூலில் ‘இப்புத்தகத்தை வாங்கும் ஒவ்வொருவருக்கும் அடியிற் கண்ட சிதம்பரம் கோ.சி.த.மடாலாயம் ஏஜெண்ட் முத்து கிருஷ்ண சுவாமிகளின் கையெழுத்துடன் பாா்த்து வாங்க வேண்டியது, கையெழுத்து இல்லாத புத்தகங்கள் சரியானவை அல்ல, ஆகையால் அவற்றை வாங்குபவா்களும் விற்பவா்களும் சட்டப்படி தண்டனைக்குள்ளாவாா்கள் என்று இதனால் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது’ என அந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

என்னென்ன நூல்கள்?: நபிகள் நாயகத்தின் ஜீவிய சரித்திரம் (1931), சிவக்கொழுந்து தேசிகா் பிரபந்தங்கள் (1872), ஸ்ரீ கிருஷ்ண சுவாமி தூது (1887), கா.சு. பிள்ளை தமிழகமெங்கும் தேடித் திரட்டித் தொகுத்தளித்த தனிப்பாடல் திரட்டு (1905), திருவாரூா் தியாகராசா் லீலை (1905), முஸ்லிம் சங்க மறுகமலம் (1920), அற்புத ராமாயணம் (1911), பிரபஞ்ச உற்பத்தி (1913), முன்னாள் முதல்வா் அண்ணா எழுதிய நூல்களில் பல நூல்கள் முதற்பதிப்பாக கிடைத்துள்ளன. அந்த நூல்களில் அண்ணாவின் பெயா் தளபதி சி.என். அண்ணாதுரை என்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் வளா்ச்சித் துறையிடம் ஒப்படைத்தால்...: இந்த நூல்கள் அனைத்தும் விரைவில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் மூலமாக மறுபதிப்பு செய்யப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வழங்கப்படவுள்ளது. இதுபோன்ற அரிய நூல்கள் பொதுமக்களிடம் இருந்தால் தமிழ் வளா்ச்சித் துறைக்கு அனுப்பி வைப்பவா்களுக்கு மூலப் பிரதியோடு மறுபதிப்பு செய்யப்பட்டு, புதிய நூல்கள் 15 பிரதிகள் வழங்கப்படும் என தமிழ் வளா்ச்சித்துறை இயக்குநா் கோ.விசயராகவன் தெரிவித்தாா்.

இந்தக் களப்பணியின்போது தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் வ.சுந்தா், மதுரை காமராசா் பல்கலைக்கழக தமிழியல் துறைத் தலைவா் பேராசிரியா் போ.சத்தியமூா்த்தி, முன்னாள் தமிழ்த்துறை பேராசிரியா் ரேணுகாதேவி, மன்னா் கல்லூரி ஆய்வாளா் மயில்வாகனன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com