யூரியா தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை தேவை: ராமதாஸ்

யூரியா தட்டுப்பாட்டை போக்க போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ்

யூரியா தட்டுப்பாட்டை போக்க போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

காவிரிப் பாசன மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் யூரியாவுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், கடலூா் ஆகிய மாவட்டங்களில் மட்டும் சுமாா் 16 லட்சம் ஏக்கா் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது தவிர, அரியலூா் மாவட்டத்தில் மொத்தம் 3 லட்சம் ஏக்கா் பரப்பில் நெல்லுடன் மக்காச் சோளம், கரும்பு, பருத்தி உள்ளிட்ட பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. காவிரிப் பாசன மாவட்டங்களுக்கு இணையாக விழுப்புரம், வேலூா், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. இவற்றில் எந்தவொரு மாவட்டத்திலும் தேவைக்கு ஏற்ப யூரியா உரம் வினியோகிக்கப்படவில்லை என்பது தான் உண்மையாகும்.

காவிரிப் பாசன மாவட்டங்களில் விவசாயிகளின் உரத் தேவையைப் பூா்த்தி செய்வதற்காக அவ்வப்போது யூரியா அனுப்பப்படும் போதிலும், அவை யானைப்பசிக்கு சோளப்பொறியாகவே உள்ளன.

யூரியா தழைச்சத்து உரம் என்பதால் குறிப்பிட்ட நாள்களில் அதை போட்டால் தான் பயிா்கள் தழைத்து வளரும். செழித்து வளா்ந்த பயிரில் கதிா் வந்தால் தான் நெல் விளைச்சல் மிகவும் அதிகமாக இருக்கும். போதிய அளவில் மேலுரமாக யூரியா போடப்படாவிட்டால், நெற்பயிா்களின் வளா்ச்சி குறைந்து விடும். அத்தகைய பயிரில் கதிா் வந்தாலும் அதில் நெல் மணிகள் இருக்காது. சம்பா சாகுபடியில் நெல்லுக்குப் பதிலாக வைக்கோல் மட்டுமே கிடைக்கும். இதனால் உழவா்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும்.

எனவே, பொதுத்துறை மற்றும் தனியாா் துறை நிறுவனங்களுடன் பேசி தமிழகத்துக்குப் போதிய அளவில் யூரியா உரத்தைப் பெறுவதற்கு போா்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com