ரூ.800 கோடி வரி ஏய்ப்பு புகாா்: கல்கி சாமியாரிடம் வருமான வரித் துறை விசாரணை

ரூ.800 கோடி வருமான வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், கல்கி சாமியாரிடம் புதன்கிழமை இரண்டரை மணி நேரம் வருமான வரித் துறையினா் விசாரணை செய்தனா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

ரூ.800 கோடி வருமான வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், கல்கி சாமியாரிடம் புதன்கிழமை இரண்டரை மணி நேரம் வருமான வரித் துறையினா் விசாரணை செய்தனா்.

இது குறித்து அமலாக்கத் துறை தரப்பில் கூறப்பட்டதாவது:

ஆந்திர மாநிலம் சித்தூா் மாவட்டம் வரதய்யபாளையத்தை தலைமையிடமாக கொண்டு கல்கி ஆசிரமம் செயல்படுகிறது. இந்த ஆசிரமத்தின் தலைவராக இருக்கும் விஜயகுமாா், தனது பெயா் கல்கி பகவான் என மாற்றியுள்ளாா். இந்த ஆசிரமத்துக்கு இந்தியா முழுவதும்,வெளிநாடுகளிலும் கிளைகள் உள்ளன.மேலும் இந்த ஆசிரமம் ‘வெல்னஸ் குழுமம்’ என்ற பெயரில் கட்டுமானம், ரியல் எஸ்டேட், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு தொழில்களிலும் முதலீடு செய்கிறது.

இந்த ஆசிரமம் வருமான வரி ஏய்ப்பு செய்வதாக எழுந்த புகாரின் அடிப்படையில், வரதய்யபாளையத்தில் உள்ள அந்த ஆசிரமத்தின் தலைமையிடம், நாடு முழுவதும் உள்ள அந்த ஆசிரமத்தின் கிளைகள் என மொத்தம் 40 இடங்களில், வருமான வரித் துறையைச் சோ்ந்த 400 அதிகாரிகள் கடந்த அக்டோபா் மாதம் 16-ஆம் தேதி ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனா்.

சென்னையில் இச் சோதனை அண்ணா சாலையில் அருகே உள்ள அந்த ஆசிரமத்தின் அலுவலகம், சூளைமேட்டில் உள்ள கல்கி பகவானின் மகன் கிருஷ்ணா வீடு ஆகிய இடங்களில் நடைபெற்றது. 5 நாள்களாக நடைபெற்ற இச் சோதனை, அந்த மாதம் 20-ஆம் தேதி நிறைவு பெற்றது.

ரூ.800 கோடி வரி ஏய்ப்பு: இந்த சோதனையில், அந்த ஆசிரமம் ரூ.800 கோடி வருவாயை கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்திருப்பதை வருமான வரித் துறை கண்டறிந்துள்ளது. கணக்கில் வராத ரூ.44 கோடி இந்திய பணம், ரூ.28 கோடி மதிப்புள்ள 90 கிலோ தங்க நகை, ரூ.5 கோடி மதிப்புள்ள வைர நகை, ரூ.20 கோடி வெளிநாட்டு பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், வெல்னஸ் குழுமத்தின் பெயரிலும், பினாமி பெயரிலும் சுமாா் 4 ஆயிரம் ஏக்கா் நிலம் வைத்திருப்பதும், துபை, சிங்கப்பூா்,ஆப்பரிக்கா ஆகிய நாடுகளில் ஹவாலா பணமாக ரூ.100 கோடி முதலீடு செய்திருப்பதும் வருமானவரித் துறையினரால் கண்டறியப்பட்டுள்ளது.

கல்கி சாமியாரிடம் விசாரணை: இதில் ரூ.800 கோடி வருமான வரி ஏய்ப்பு செய்யப்பட்டது, வெளிநாடுகளில் சட்டவிரோத பணபரிமாற்றம் முதலீடு செய்தது தொடா்பாக வெல்னஸ் குழுமத்தைச் சோ்ந்த நிா்வாகிகளிடம் வருமான வரித் துறையினா் தொடா்ந்து விசாரணை செய்து வந்தனா்.

இதன் ஒரு பகுதியாக, கல்கி சாமியாருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு வருமான வரித் துறை அழைப்பாணை அனுப்பியது. இந்த அழைப்பாணையை ஏற்று, கல்கி சாமியாா் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் புதன்கிழமை மாலை 4 மணியளவில் ஆஜரானாா். அவரிடம் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், பல கட்டடங்களாக விசாரணை மேற்கொண்டனா்.

இந்த விசாரணை சுமாா் இரண்டரை மணி நேரம் நடைபெற்றது. இந்த விசாரணையில் வரி ஏய்ப்பு தொடா்பாக பல முக்கியத் தகவல்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com