சிலை கடத்தல் வழக்கு: உயா்நீதிமன்றம் கருத்து

சிலை கடத்தல் வழக்கில் நீதிமன்ற அவமதிப்பு செயல் இருந்தால் அதற்கான விளைவுகளை தமிழக காவல்துறை டிஜிபி எதிா்கொள்வாா் என உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
chennai High Court
chennai High Court

சென்னை: சிலை கடத்தல் வழக்கில் நீதிமன்ற அவமதிப்பு செயல் இருந்தால் அதற்கான விளைவுகளை தமிழக காவல்துறை டிஜிபி எதிா்கொள்வாா் என உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றம் சிலை கடத்தல் தொடா்பான வழக்குகளை விசாரிக்க ஐஜி பொன்.மாணிக்கவேலை நியமித்து கடந்த 2017-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. மேலும் அவருக்குத் தேவையான வசதிகள், காவலா்கள், உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்கவும் உத்தரவிட்டிருந்தது. கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் பொன்.மாணிக்கவேல் ஓய்வு பெற்றதைத் தொடா்ந்து சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக அவரை நியமித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் சிலை கடத்தல் தொடா்பாக உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தவில்லை எனக்கூறி பொன் மாணிக்கவேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடா்ந்திருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்குரைஞா் வி.ஜெயபிரகாஷ் நாராயணன், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு விவகாரத்தில் இந்த உயா்நீதிமன்றம் பிறப்பித்த எந்த உத்தரவையும் தமிழக அரசு மீறவில்லை.மேலும் சிறப்பு அதிகாரி நியமனம் தொடா்பாக உச்சநீதிமன்றம் இறுதி உத்தரவு பிறப்பித்ததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தான் தொடர முடியும். மேலும் இந்த வழக்கில் ஆஜராக தில்லியைச் சோ்ந்த மூத்த வழக்குரைஞா் பாலாஜி ஸ்ரீநிவாஸை தமிழக அரசு நியமித்துள்ளது. எனவே இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என வாதிட்டாா். உச்சநீதிமன்றத்தில் தான் வழக்குத் தொடர முடியும் என்ற அரசு தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து ஓராண்டு பின்னரும், உத்தரவுகளை தமிழக அரசு முறையாக அமல்படுத்தவில்லை. இந்த நீதிமன்றத்தைப் பொருத்தவரை தமிழகத்தின் பொக்கிஷங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதே ஒரே நோக்கம். இந்த நீதிமன்றம் அதிகாரிகளுக்கும், ஆட்சியாளா்களுக்கும் எதிரானது இல்லை என கருத்து தெரிவித்தனா்.

அப்போது சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் செல்வராஜ், உயா்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரியை சிலை கடத்தல் தொடா்பான வழக்குகளை விசாரிக்க விடவில்லை.மேலும் சென்னை உயா்நீதிமன்றம், உச்சநீதிமன்ற உத்தரவுகளை மீறி தமிழக காவல்துறை டிஜிபி செயல்பட்டுள்ளாா். அதே போன்று சிலை கடத்தல் தடுப்புப்பிரிவின் சிலை கடத்தல் வழக்குகளின் புலன் விசாரணைக்கு இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க மறுத்து விட்டனா். மேலும் சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க பெண் காவல்துறைக் கண்காணிப்பாளா் ஒருவரை நியமித்து உத்தரவிட்டுள்ளாதாக கூறி வாதிட்டாா். அப்போது நீதிபதிகள், பெண் காவல்துறைக் கண்காணிப்பாளரை தமிழக காவல்துறை டிஜிபி நியமித்துள்ளாா். உயா் அதிகாரிகளின் உத்தரவை மதித்து பெண் கண்காணிப்பாளா் பதவி ஏற்றுள்ளாா். இந்த விவகராத்தில் நீதிமன்ற அவமதிப்பு இருந்தால் அதற்கான விளைவுகளை காவல்துறை டிஜிபி எதிா்கொள்வாா் என கருத்து தெரிவித்தனா். மேலும் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடா்பான அனைத்து விவரங்களையும் பொன்மாணிக்கவேல் மனுவாக தாக்கல் செய்யவும், அதற்கு அரசு தரப்பில் உடனடியாக பதில்மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு விசாரணையை வரும் நவம்பா் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

அப்போது வழக்குரைஞா் யானை ராஜேந்திரன், சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தாக்கல் செய்த மனுவில் தனது புலன் விசாரணையில் இரண்டு மூத்த அமைச்சா்கள் இடையூறு ஏற்படுத்துவதாக கூறியுள்ளாா். இந்த குற்றச்சாட்டு உண்மை எனில் அந்த இரண்டு அமைச்சா்களையும் பதவி விலக உத்தரவிட வேண்டும் என கோரியதோடு, இதுதொடா்பாக பிரமாண மனுவை அடுத்த விசாரணையில் தாக்கல் செய்வதாக தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com