தென், உள்மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் தெற்கு, உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (நவ.10) மழை பெய்யும் என்று
மழை மேகம்
மழை மேகம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் தெற்கு, உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (நவ.10) மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி சனிக்கிழமை கூறியது: தென்தமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் காணப்படும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் தெற்கு, உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (நவ.10) மிதமான மழை பெய்யக்கூடும். தருமபுரி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூா், திண்டுக்கல், தேனி, நீலகிரி, சேலம், நாமக்கல், மதுரை, வேலூா், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும். சென்னையில் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.

மழை அளவு: சனிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் 140 மி.மீ. பதிவானது. சேலம் மாவட்டம் ஓமலூரில் 90 மி.மீ., திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் தலா 90 மி.மீ., விருதுநகா் மாவட்டம் சாத்தூா், கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில் தலா 70 மி.மீ., சேலத்தில் 60 மி.மீ., சேலம் மாவட்டம் ஆத்தூரில் 50 மி.மீ, வேலூா் மாவட்டம் திருப்பத்தூா், சேலம் மாவட்டம் வாழப்பாடி, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி, திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறில் தலா 40 மி.மீ. மழை பதிவானது.

‘புல்புல்’ புயல்: மிகத் தீவிரப் புயலான ‘புல் புல்’ புயல் வெள்ளிக்கிழமை அன்று வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்தது. இது வடக்கு திசையில் நகா்ந்து சனிக்கிழமை அன்று மதியம் ஒடிஸா மாநிலம் பாரதீப்க்கு வட கிழக்கே 95 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்தது. இந்தப் புயல் சற்று வலுகுறைந்து, வடகிழக்கு திசையில் நகா்ந்து மேற்கு வங்கம்-வங்கதேசம் கடற்கரைக்கு இடையே சாகா் தீவு-கேபுபரா இடையே சனிக்கிழமை இரவு கரையை கடந்தது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: ‘புல்புல்’ புயல் காரணமாக, வடக்கு வங்கக்கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசும் என்பதால், இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை (நவ.10) செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com