கைக்குட்டையில் திருமண அழைப்பிதழ்: காஞ்சிபுரம் துணை ஆட்சியரின் புதிய யோசனை..! சபாஷ்!!

நெகிழிக்கு மாற்றாக துணிப் பைகளை வலியுறுத்தும் அதே நேரத்தில் திருமண அழைப்பிதழையே கைக்குட்டையில் அச்சடித்து அசத்தியிருக்கிறார் காஞ்சிபுரம் துணை ஆட்சியர் செல்வமதி வெங்கடேஷ்.
wedding cards on handkerchief
wedding cards on handkerchief


நெகிழிக்கு மாற்றாக துணிப் பைகளை வலியுறுத்தும் அதே நேரத்தில் திருமண அழைப்பிதழையே கைக்குட்டையில் அச்சடித்து அசத்தியிருக்கிறார் காஞ்சிபுரம் துணை ஆட்சியர் செல்வமதி வெங்கடேஷ்.

திருமணம் என்றாலே ஏராளமான செலவுகள் சூழ்ந்து கொள்ளும். அதில் பல செலவுகள் பயனற்றுப் போவதும் உண்டு. அதில் திருமண அழைப்பிதழ் என்பதை, தங்களது செல்வச் செழிப்பைக் காட்டும் கண்ணாடியாகப் பலரும் பயன்படுத்துகிறார்கள்.

ஆனால், அந்த நிலைமையை மாற்றி ஒரு புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் திருச்சியை பூர்வீகமாகக் கொண்ட காஞ்சிபுரம் மாவட்ட சிறப்பு துணை ஆட்சியர் செல்வமதி வெங்கடேஷ்.

திருச்சியில் நடைபெறும் தனது மகன் பாலாஜி - சரண்யா திருமணத்துக்கான அழைப்பிதழை கைக்குட்டையில் அச்சடித்து வழங்கியிருக்கிறார். இதன் மூலம் அழைப்பிதழ் குப்பைக்குப்போவதை தடுத்து நிறுத்தியுள்ளார். ஏராளமான காகிதங்கள் வீணாவதும் தடுக்கப்பட்டுள்ளது.

அழைப்பிதழ் முதல் விருந்தினர்களுக்குக் கொடுக்கும் பரிசுப்பொருள் வரை அனைத்தையும் அழகாகத் திட்டமிட்டுள்ளனர் இவரது குடும்பத்தினர்.

"எவ்வளவு விலை கொடுத்து அழைப்பிதழை பிரிண்ட் செய்தாலும், திருமணம் முடிந்த பிறகு அது குப்பைக்குத்தான் செல்லும். பல முறை இப்படி விலை உயர்ந்த திருமண அழைப்பிதழ்களை குப்பையில் போடும் போது கவலைப்பட்டிருக்கிறேன். அதனால்தான் இந்த புதிய முடிவை எடுத்தோம். கைக்குட்டையில் திருமண அழைப்பிதழை அச்சடித்திருக்கிறோம். 2 - 3 முறை துவைத்ததும், அதில் இருக்கும் பிரிண்ட் போய்விடும். பிறகென்ன வழக்கமான கைக்குட்டையைப் போலவே பயன்படுத்தலாம்" என்று செல்வமதி கூறுகிறார்.

இந்த கைக்குட்டையில் அச்சடிக்கப்பட்ட திருமண அழைப்பிதழ் ஒரு அட்டைப்பெட்டியில் வைத்துக் கொடுக்கப்படுகிறது. இதுவும் நகைகளைப் பாதுகாக்க பெண்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், திருமணத்திலும் தண்ணீர் முதல் பழச்சாறு வரை அனைத்தும்  ஸ்டீல் டம்பளரிலேயே வழங்கப்பட்டது. கை துடைக்க காட்டன் டவல்கள் கொடுக்கப்பட்டன. விருந்தினர்களுக்குப் பரிசுப் பொருளாக ஒரு துணிப் பையும், பருத்தி டவலும், விதைப் பந்துகளும் வழங்கப்பட்டன.

இது விருந்தினர்களை மகிழ்வித்ததோடு மட்டுமல்ல, சுற்றுச்சூழலுக்கும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. திருமணம் முடிந்து தூக்கி எறியப்படும் அனைத்துமே சுற்றுச்சூழலை பாதிக்காமல், பண்படுத்தும் வகையில் அமைந்திருப்பது பாராட்டுக்குரியது.

அழைப்பிதழ் கொடுத்து திருமணத்துக்கு வந்தவர்கள் மட்டுமல்ல, பூமி, நிலம், நீர் என ஐம்பூதங்களும் கூட மணமக்களை வாழ்த்தும் என்பதில் ஐயமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com