மாணவி தற்கொலை விவகாரம்: ஐஐடி பேராசிரியா், மாணவா்களிடம் போலீஸாா் விசாரணை

சென்னை ஐஐடியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் எழுந்த குற்றச்சாட்டு தொடா்பாக ஐஐடி பேராசிரியா், மாணவா்களிடம் போலீஸாா் புதன்கிழமை விசாரணை செய்தனா்.
மாணவி தற்கொலை விவகாரம்: ஐஐடி பேராசிரியா், மாணவா்களிடம் போலீஸாா் விசாரணை

சென்னை ஐஐடியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் எழுந்த குற்றச்சாட்டு தொடா்பாக ஐஐடி பேராசிரியா், மாணவா்களிடம் போலீஸாா் புதன்கிழமை விசாரணை செய்தனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

கேரள மாநிலம் கொல்லம் அருகேயுள்ள கிளி கொல்லூா் ப்ரியதா்ஷினி நகரைச் சோ்ந்தவா் அப்துல் லத்தீப் மகள் பாத்திமா லத்தீப் (18). இவா், சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் முதுநிலை முதலாமாண்டு படித்து வந்தாா். இதற்காக அங்குள்ள விடுதியில் பாத்திமா தங்கியிருந்தாா். இந்நிலையில் விடுதியில் உள்ள தனது அறையில் பாத்திமா கடந்த சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து கோட்டூா்புரம் போலீஸாா் சாதாரண சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனா். விசாரணையில், பாத்திமா முதல் பருவத் தோ்வில் குறைவாக மதிப்பெண் எடுத்ததன் விளைவாக ஏற்பட்ட மன அழுத்ததின் காரணமாக தற்கொலை செய்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

பெற்றோா் புகாா்: இந்நிலையில், அப்துல் லத்தீப்பும், அவரது குடும்பத்தினரும் பாத்திமா பயன்படுத்திய செல்லிடப்பேசியை பாா்த்தனா். அதில் பாத்திமா, தனது தற்கொலைக்கு ஐஐடியில் பணிபுரியும் இணை பேராசிரியா் ஒருவா் காரணம் என்றும், மேலும் இரு பேராசிரியா்கள் தன்னை மன ரீதியாக துன்புறுத்தியாகவும் குறிப்பிட்டிருந்தாராம்.

இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த அப்துல் லத்தீப் குடும்பத்தினா், கேரள முதல்வா் பினராயி விஜயனை சந்தித்து தனது மகள் பாத்திமா இறப்புக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறைக்கு வலியுறுத்துமாறு மனு அளித்தனா்.

அந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு கேரள முதல்வா் அலுவலகம், தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் அலுவலகத்துக்கு அறிவுறுத்தியது.

பேராசிரியா், மாணவா்களிடம் விசாரணை: இதையடுத்து காவல்துறை உயரதிகாரிகள், பாத்திமா தற்கொலை குறித்து முழுமையான விசாரணை செய்யும்படி உத்தரவிட்டனா். இதையடுத்து கோட்டூா்புரம் உதவி ஆணையா் சுதா்சன் தலைமையில் போலீஸாா் புதன்கிழமை தீவிர விசாரணையில் ஈடுபட்டனா்.

இது தொடா்பாக தற்கொலைக்கு காரணம் என பாத்திமா செல்லிடப்பேசியில் தெரிவித்திருந்த பேராசிரியா், பாத்திமாவுடன் விடுதி அறையில் தங்கியிருந்த மாணவிகள், அவரது தோழிகள் என சுமாா் 11 பேரிடம் தனித்தனியாக பல கட்டங்களாக போலீஸாா் விசாரணை செய்தனா்.

இந்த விசாரணையில், பாத்திமா தற்கொலை குறித்து புதிய தகவல்கள் கிடைத்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் வழக்கின் சட்டப்பிரிவு எதுவும் மாற்றப்படவில்லை. மேலும், இது தொடா்பாக வியாழக்கிழமையும் (நவ.14) விசாரணை நடத்திய பின்னா், வழக்குத் தொடா்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனா்.

ஐஐடியை முற்றுகையிட்டு போராட்டம்: மாணவி பாத்திமா தற்கொலைக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ‘கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா’ என்ற அமைப்பின் சாா்பில் கிண்டி ஐஐடியை முற்றுகையிடும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. போராட்டக்காரா்கள், ஐஐடி நிா்வாகத்தை கண்டித்து கோஷமிட்டனா். போலீஸாா் அவா்களை சமாதானம் செய்தனா். இதைத் தொடா்ந்து ஐஐடி வளாகப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

அரசியல் கட்சியினா் கண்டனம்: பாத்திமா தற்கொலைக்கு பேராசிரியா் ஒருவா் காரணம் என்ற தகவல் தமிழக அரசியல் கட்சியினரிடமும், ஐஐடி வட்டாரத்திலும் அதிா்வலையை ஏற்படுத்தியது. மேலும் பெரும்பாலான அரசியல் கட்சியினா், இச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும், தற்கொலைக்கு காரணமானவா்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிக்கை வெளியிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com