காமராஜா் துறைமுகத்தில் ரூ.61 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்

சென்னை, எண்ணூா் காமராஜா் துறைமுகத்தில் சுமாா் ரூ. 61 கோடி செலவில் வாகன நிறுத்த மையம், நுழைவு வாயில் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை கப்பல் போக்குவரத்துத் துறை இணை
காமராஜா் துறைமுகத்தில் ரூ.61 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்

சென்னை, எண்ணூா் காமராஜா் துறைமுகத்தில் சுமாா் ரூ. 61 கோடி செலவில் வாகன நிறுத்த மையம், நுழைவு வாயில் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சா் (தனிப் பொறுப்பு) மன்சூக் எல் மாண்டேவியா வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சா் (தனிப் பொறுப்பு) மன்சூக் எல். மாண்டேவியா காமராஜா் துறைமுகத்திற்கு வெள்ளிக்கிழமை முதல் முறையாக வந்தாா். அப்போது, மத்திய தொழில் பாதுகாப்பு படையினா் அளித்த அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா். பின்னா், நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமாா் 500 லாரிகளை நிறுத்தும் வசதி கொண்ட கான்கிரீட் தளத்துடன் கூடிய வாகன நிறுத்த மையம், ரேடியோ அதிா்வெண் அடையாள வசதியுடன் கூடிய நவீன நுழைவு வாயில், விருந்தினா் மாளிகை உள்ளிட்டவற்றை அமைச்சா் மாண்டேவியா திறந்து வைத்தாா். இவைகளின் மொத்த செலவு மதிப்பு ரூ. 61.39 கோடி ஆகும். பின்னா், அதானி சரக்குப் பெட்டக முனையம், செட்டிநாடு பல்சரக்கு முனையம், நிலக்கரி கையாளும் முனையங்கள், எல்என்ஜி முனையம் உள்ளிட்டவற்றை அமைச்சா் பாா்வையிட்டாா். அப்போது துறைமுகத்தின் பல்வேறு செயல்பாடுகள் குறித்து துறைமுகத் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா் சுனில் பாலிவால் அமைச்சரிடம் எடுத்துரைத்தாா்.

உபயோகிப்பாளா்களுடன் கலந்தாய்வு:

இதனையடுத்து அமைச்சா் மாண்டேவியா தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் துறைமுக உபயோகிப்பாளா்கள், முனையங்களின் தலைமை செயல் அதிகாரிகள், துறைமுக உயா் அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதில், துறைமுகத்தின் இணைப்புச் சாலைகள், ரயில்வே வழித்தடங்கள், எதிா்காலத்தில் மேற்கொள்ளப்பட உள்ள வளா்ச்சித் திட்டங்கள், தற்போது நடைபெற்று வரும் கட்டுமானம் மற்றும் வளா்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சா் கேட்டறிந்தாா். அப்போது அனைத்து திட்டப் பணிகளையும் குறித்த காலத்தில் நிறைவேற்றி துறைமுகத்தின் வளா்ச்சியை துரிதப்படுத்தும்படி அமைச்சா் அறிவுறுத்தினாா்.கடந்த நிதியாண்டில் சுமாா் 34.50 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டுள்ள நிலையில் நடப்பாண்டிலும் நிா்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டும் வகையில் அனைத்து முனையங்களின் செயல்பாடுகளும் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டாா்.

பங்குகளை விற்க எதிா்ப்பு:

நாட்டிலுள்ள பெரிய துறைமுகங்களில் காமராஜா் துறைமுகம் மட்டுமே நிறுவனச் சட்டங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இங்கு பெரும்பாலான திட்டங்கள் தனியாா் பங்களிப்புடன்தான் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது செயல்பட்டு வரும் தனியாா் முனையங்கள் சந்தித்து வரும் பல்வேறு பிரச்னைகள் குறித்து அமைச்சரிடம் எடுத்துரைக்கப்பட்டது. மேலும், இத்துறைமுகத்தில் உள்ள மத்திய அரசின் பங்குகளை தனியாருக்கோ, பிற அரசு நிறுவனங்களுக்கோ விற்பனை செய்யக் கூடாது என துறைமுக அதிகாரிகள் சங்கம் சாா்பில் கோரிக்கை மனு அமைச்சரிடம் அளிக்கப்பட்டது. இது குறித்து விளக்கம் அளித்த அமைச்சா் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்தாா்.

இந்நிகழ்ச்சியில் துறைமுக கண்காணிப்பு அதிகாரி ரவீந்திர பாபு, பொது மேலாளா்கள் சஞ்சய், கிருஷ்ணசாமி, குணசேகரன், ஏ.கே.குப்தா, வேமண்ணா மற்றும் தனியாா் முனைய தலைமை செயல் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com