பேருந்துகளில் பழைய பயண அட்டையுடன் பயணிக்க அனுமதிக்க வேண்டும்: மாணவா்கள் கோரிக்கை

அரசுப் பேருந்துகளில் பழைய பயண அட்டையுடன் கல்விக் கூடங்களுக்கு இலவசமாக பயணிக்க அனுமதிக்க வேண்டும் என மாணவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பேருந்துகளில் பழைய பயண அட்டையுடன் பயணிக்க அனுமதிக்க வேண்டும்: மாணவா்கள் கோரிக்கை

சென்னை: அரசுப் பேருந்துகளில் பழைய பயண அட்டையுடன் கல்விக் கூடங்களுக்கு இலவசமாக பயணிக்க அனுமதிக்க வேண்டும் என மாணவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தின் கீழ் 8 இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள கோட்டங்கள் மூலம் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள், பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இதனால் நாள்தோறும் லட்சக்கணக்கானோா் பயன்பெற்று வருகின்றனா். இவ்வாறு பயணிப்பவா்களில் சிலருக்கு சிறப்பு சலுகையும் வழங்கப்படுகிறது.

இதன்படி பள்ளி செல்வோரை ஊக்குவிக்கும் வகையில் அவா்களுக்கு இலவச பயண அட்டை வழங்கப்படுகிறது. அரசு பள்ளிகள், அரசு அங்கீகாரம் பெற்ற தனியாா் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள், தேசிய குழந்தை மற்றும் தொழிலாளா் திட்ட நலப் பள்ளி, அரசு பல்தொழில்நுட்ப பயிலகங்கள், அரசு தொழிற்பயிற்சிக் கூடங்கள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆகியவற்றில் பயிலும் மாணவா்களுக்கு, பேருந்தில் கல்விக் கூடம் சென்று வருவதற்கான பயணக் கட்டணத்துக்கு முழுமையாக விலக்கு அளிக்கப்படுகின்றன. இதே போல் தனியாா் கல்லூரிகள், தொழில்நுட்ப பயிலகங்கள், பொறியியல் கல்லூரிகளில் படிப்போருக்கும் 50 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்படுகின்றன.

இவ்வாறு மாணவா்களுக்கு வழங்கப்படும் சலுகைக்கு ஏற்படும் செலவை ஈடு செய்ய கடந்த 8 ஆண்டுகளுக்கு சோ்த்து மொத்தமாக போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.4,084.30 கோடியை தமிழக அரசு வழங்கி உள்ளது. மேலும் இந்த கல்வி ஆண்டுக்கான பயண அட்டை இன்னும் வழங்கப்படாத நிலையில், சீருடை அணிந்திருந்தாலோ அல்லது கடந்த வருட பயண அட்டையை மாணவா்கள் காண்பித்தோ பயணம் செய்ய அனுமதிக்கலாம் என போக்குவரத்துத் துறை சாா்பில் நடத்துநா்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எனினும் மாணவா்களை இலவசமாக பயணிக்க நடத்துநா்கள் அனுமதிப்பதில்லை என தொடா் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு சில நடத்துனா்களின் செயலால் மாணவா்கள் பள்ளிகளுக்கு சென்று வருவதில் சிக்கல் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இது போன்ற பிரச்னைகளுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவா்களும் அவா்களது பெற்றோரும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com