திருமாவளவனை எங்கு பார்த்தாலும் அடியுங்கள்: சர்ச்சை உண்டாக்கிய பாஜக ஆதரவு நடிகையின் டிவீட்

இந்து மதத்தை விமர்சித்த திருமாவளவனை எங்கு பார்த்தாலும் அடியுங்கள் என்று பாஜக ஆதரவு நடிகை ஒருவர் செய்த ட்வீட்டால் சர்ச்சை எழுந்துள்ளது.
திருமாவளவன் எம்.பி
திருமாவளவன் எம்.பி

சென்னை: இந்து மதத்தை விமர்சித்த திருமாவளவனை எங்கு பார்த்தாலும் அடியுங்கள் என்று பாஜக ஆதரவு நடிகை ஒருவர் செய்த ட்வீட்டால் சர்ச்சை எழுந்துள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் இயக்கம் சார்பில் சனாதன கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாடு அண்மையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், சமீபத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய அயோத்தி தீர்ப்பு குறித்து விமர்சித்துப் பேசினார்.

அதில், 'பாபர் மசூதி இருந்த இடத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் அதற்கு கீழே ஒரு கட்டமைப்பு இருந்ததை குறிப்பிட்டுள்ளனர். அகழ்வாராய்ச்சியில் அது இந்து கோயில், மசூதி, தேவாலயம் என்று அறிய முடியாது. ஆனால், அந்த கட்டமைப்பை வைத்து அறியலாம். குவி மாடமாக இருந்தால் மசூதி என்றும் கூம்பு போல இருந்தால் கிறிஸ்தவ தேவாலயம் என்றும் அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது இந்து கட்டடம்' என்றும் பேசினார். இதுதொடர்பான விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.

பின்னர் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து திருமாவளவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர், 'விசிக மகளிர் மாநாட்டில் நான் ஆற்றிய உரையில், ஒருசில சொற்கள் இந்துக்களின் உணர்வுகளைக் காயப்படுத்துவதாக உள்ளது என சிலர் என்னிடம் கூறினர். அவை உரைவீச்சின் போக்கில் தன்னியல்பாக தெறித்த சொற்களேயாகும். அதில் உள்நோக்கம் இல்லை; உண்மை உண்டு என்பதை எனது நண்பர்கள் அறிவர். எனினும், அதற்காக நான் வருந்துகிறேன் என தெரிவித்தார்.

இந்நிலையில் இந்து மதத்தை விமர்சித்த திருமாவளவனை எங்கு பார்த்தாலும் அடியுங்கள் என்று பாஜக ஆதரவு நடிகை ஒருவர் செய்த ட்வீட்டால் சர்ச்சை எழுந்துள்ளது.

திருமாவளவன் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் பாஜக ஆதரவு நிலைப்பாடு கொண்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அந்த வரிசையில் நடிகையும், நடன இயக்குநரும், பாஜக ஆதரவாளருமான காயத்ரி ரகுராம் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் திருமாவளவனை விமர்சித்து பல கருத்துளை பகிர்ந்திருந்தார்.

அதில், இந்துக்கள் அனைவரும் திருமாவளவனை எங்கு பார்த்தாலும் அடியுங்கள் எனவும், பின்னர் திருமாவளவன் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த போது, 'கண்ணுல கிளிசரின் போடுங்க... நடிப்பு பத்தல' எனவும் கமெண்ட் செய்துள்ளார். அதையடுத்து மேலும் திருமாவளவன் குறித்து  பல சர்ச்சைக்குரிய கருத்துக்களையும்  தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.

இதன் காரணமாக அவரது வீட்டை விடுதலை சிறுத்தை கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.அதையும் நேரலை செய்திருந்த காயத்ரி, பின்னர் விசி கட்சியினரிடம் இருந்து தனக்கு வந்திருந்த  போன் அழைப்புகளையும் பொதுவில் வெளியிட்டிருந்தார்.  

அதேசமயம் இந்த விவகாரத்தில் தனக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் ட்விட்டரில் கோரிக்கை வைத்திருந்தார்.  

இந்நிலையில் தற்போது விதிமுறைகளை மீறியதாக காயத்ரி ரகுராமனின் ட்விட்டர் கணக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com