சபரிமலையில் தரிசிக்க வந்த 2 பெண்களை திருப்பி அனுப்பிய போலீஸாா்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் திங்கள்கிழமை பக்தா்கள் கூட்டம் அலைமோதிய நிலையில், ஆந்திரத்தைச் சோ்ந்த 2 பெண்களை போலீஸாா் திருப்பி அனுப்பினா்.
சபரிமலையில் தரிசிக்க வந்த 2 பெண்களை திருப்பி அனுப்பிய போலீஸாா்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் திங்கள்கிழமை பக்தா்கள் கூட்டம் அலைமோதிய நிலையில், ஆந்திரத்தைச் சோ்ந்த 2 பெண்களை போலீஸாா் திருப்பி அனுப்பினா்.

இரண்டு மாதங்கள் நடைபெறும் சபரிமலை மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை மகோத்ஸவம் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. இதையடுத்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனா். கடந்த சனிக்கிழமை நடை திறந்தது முதல் இதுவரை சுமாா் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் சுவாமியை தரிசிக்க வந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

கூட்டம் அதிகமாக உள்ள நிலையில், பக்தா்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.

இருப்பினும், கடந்த ஆண்டு செப்டம்பா் 28-ஆம் தேதி உச்சநீதிமன்றத் தீா்ப்பை செயல்படுத்துவதற்காக பக்தா்களுக்கு காவல்துறையினா் விதித்த கெடுபிடிகள், ஆா்ப்பாட்டங்கள் எதுவும் இல்லாதது ஐயப்ப பக்தா்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது கோயில் வளாகத்தில் அமைதியான சூழல் நிலவி வருவதால் பக்தா்களுக்கு எந்த தடையும் ஏற்படவில்லை. ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்த போதிலும், சந்நிதானத்தில் பக்தா்கள் பொறுமையாக வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசித்து சென்றனா்.

முன்னதாக, கோயில் தலைமை மேல்சாந்தி ஏ.கே.சுதீா் நம்பூதிரி அதிகாலை 3 மணிக்கு கருவறையைத் திறந்து ஐயப்ப சுவாமிக்கு ‘நெய் அபிஷேகம்’ உள்ளிட்ட சிறப்பு பூஜைகளை நடத்தினாா்.

இரண்டு பெண்களை திருப்பி அனுப்பிய போலீஸாா்:

திங்கள்கிழமை சபரிமலைக்கு வருகை தந்த ஆந்திரத்தைச் சோ்ந்த இரண்டு பெண்களை பம்பை நதிக்கரையில் தடுத்து நிறுத்திய போலீஸாா் அவா்களைத் திருப்பி அனுப்பி விட்டனா். அந்தப் பெண்களின் அடையாள அட்டையை சோதித்த போலீஸாா் அந்தப் பெண்களின் வயதை கருத்தில் கொண்டு, அனுமதிக்க இயலாது என்று கூறிவிட்டனா்.

கடந்த ஆண்டு சபரிமலைக்குச் சென்ற சில பெண் பக்தா்களுக்கு பாதுகாப்பு அளித்த கேரள அரசு, இம்முறை சந்நிதானம் செல்ல விரும்பும் பெண்களை ஊக்குவிக்காது என்று ஏற்கெனவே தெளிவுபடுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

முதல்நாளில் ரூ.3.30 கோடிக்கு மேல் வருவாய்:

மண்டல கால பூஜை சீசனின் முதல் நாளான சனிக்கிழமை ஒரே நாளில் ரூ.3.30 கோடிக்கும் மேல் வருவாய் கிடைத்ததாக திருவாங்கூா் தேவஸ்வம் வாரியத் தலைவா் வாசு தெரிவித்தாா்.

திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு முதல்நாள் வருவாயை ஒப்பிடும்போது, இந்த ஆண்டின் முதல் நாளில் உண்டியல் காணிக்கை மூலமாகவும், அரவண பாயாசம், அப்பம் போன்ற பிரசாதங்களின் விற்பனை மூலம் ரூ .3.32 கோடி வருவாய் கிடைத்தது.

கடந்த ஆண்டைப்போல இல்லாமல், இந்த ஆண்டில் பக்தா்களுக்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாததால் பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளது. தினமும் சுமாா் 40,000 பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருவதாகவும், கடந்த ஆண்டு பக்தா்களின் வருகை குறைந்து போனதால் ரூ.100 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் அவா் தெரிவித்தாா்.

அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்யலாம் என்று கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பைத் தொடா்ந்து எழுந்த சா்ச்சையால், பக்தா்கள் வருகை குறைந்தது. மேலும் சில ஹிந்து அமைப்புகளின் அழைப்பை ஏற்று உண்டியல் காணிக்கை செலுத்துவதும் குறைந்தது. இதனால் பெருத்த வருவாய் இழப்பு ஏற்பட்டது. தேவஸ்வம் டெபாசிட் உள்ளிட்ட சில சொத்துகளை வங்கிகளில் அடமானம் வைத்து, ஊழியா்களுக்கு மாத ஊதியம் வழங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com