மகிந்தா ராஜபக்சேவின் மகன் நமக்குப் பாடமெடுப்பது நகைப்புக்குரியது: சீமான் ஆவேசம்

மகிந்தா ராஜபக்சேவின் மகன் சமாதானத்தையும், அமைதியையும் பற்றி நமக்குப் பாடமெடுப்பது நகைப்புக்குரியது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சீமான்
சீமான்

சென்னை: மகிந்தா ராஜபக்சேவின் மகன் சமாதானத்தையும், அமைதியையும் பற்றி நமக்குப் பாடமெடுப்பது நகைப்புக்குரியது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக புதனன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழர், சிங்களர் எனும் இரு இனங்களிடையே தமிழக அரசியல் தலைவர்கள் பகைமையையும், துவேசத்தையும் உண்டாக்குவதாக மகிந்தா ராஜபக்சேவின் மகனும், இலங்கை பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சே கூறியிருப்பது வன்மையானக் கண்டனத்திற்குரியது. உலக நாடுகளால் தடைசெய்யப்பட்ட நச்சுக்குண்டுகளை வான்வழித்தாக்குதலின் மூலம் வீசி, ஒரு உள்நாட்டுப்போரை நடத்தி இரண்டு இலட்சம் தமிழர்களைக் கொன்றொழித்த இனப்படுகொலையாளன் மகிந்தா ராஜபக்சேவின் மகன் சமாதானத்தையும், அமைதியையும் பற்றி நமக்குப் பாடமெடுப்பது நகைப்புக்குரியது.

இந்திய வல்லாதிக்க பேரரசும், சிங்களப் இனவாத அரசும் உலகின் பல்வேறு நாடுகளுடன் கூட்டுசேர்ந்து ஈழ நிலத்தில் நிகழ்த்திய கோர இனப்படுகொலை முடிந்து பத்தாண்டுகளைக் கடந்தும் இன்னும் அதற்குரிய நீதி நிலைநாட்டப்படாத நிலையில், நடைபெற்று முடிந்திருக்கிற இத்தேர்தலால் எவ்வித மாற்றமும் அந்நிலத்தில் நிகழப்போவதில்லை என்பதைத்தான் தொடக்கம் முதலே வலியுறுத்தி வருகிறேன். அதனையேதான், தமிழக அரசியல் தலைவர்களும் கூறியிருக்கிறார்கள்.

சிங்கள இனவாதிகளுக்கு இடையேயானப் போட்டியில் எவர் வென்றாலும் அது தமிழர்களுக்கு எவ்விதப் பலனையும் தரப்போவதில்லை என்பதே மறுக்கவியலா உண்மை. இதனைத் தெளிவாக உணர்ந்தே அதிபர் தேர்தலைப் புறக்கணித்திருக்கிறார்கள் எமது மக்கள்.

தமிழினப்படுகொலையைத் திட்டமிட்டு நடத்தி இரண்டு இலட்சம் தமிழர்களைக் கொன்றொழித்த இனப்படுகொலையாளன் மகிந்தா ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே அதிபராகப் பொறுப்பேற்றிருப்பது தமிழர்களுக்கு ஒரு இருண்டகாலமாகும்.

கோத்தபய ராஜபக்சே பதவியேற்றவுடனே தனக்கு வாக்களிக்காத தமிழர்கள் மீது தனது ஆதரவாளர்களை ஏவித்தாக்குதல் நடத்தத் தொடங்கி இருப்பதாக வரும் செய்திகளைப் பன்னாட்டுச் சமூகத்திற்கும், இந்தியச் சமூகத்திற்கும் சுட்டிக்காட்டுகிறேன்

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இந்திய அரசின் நிலைப்பாடுகளுக்கு எதிரானவர் என்பது மட்டுமல்ல, சீனாவில் ஆதிக்கத்திற்கு துணைபோகிறவரும்கூட. அவரது சீன ஆதரவு செயல்பாடுகள் இந்தியாவின் இறையாண்மைக்கே பேராபத்தினை விளைவிக்கக்கூடும் என்பதனை உணர்ந்து, இனியாவது இந்தியப் பேரரசு தார்மீகத்தோடு தமிழர்கள் பக்கம் நிற்க முன்வர வேண்டும்.

ஆகவே, உலகத்தமிழர்களின் நெடுநாள் கோரிக்கையான ஈழ இனப்படுகொலைக்குத் தலையீடற்ற ஒரு பன்னாட்டுப் பொது விசாரணை மற்றும் அதனைத் தொடர்ந்து தனித்தமிழீழம் அமைவதற்கான ஒரு பொது வாக்கெடுப்பு ஆகியவைகள் நடத்தப்படுவதற்கான ஒரு சூழலை இந்திய அரசும், பன்னாட்டுச்சமூகமும் ஏற்படுத்தித் துயருற்று இருக்கிற தமிழர் வாழ்வில் விடிவை ஏற்படுத்தித்தர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com