தமிழகத்தில் மேலும் 3 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அரசு விண்ணப்பம்: அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தகவல்

தமிழகத்தில் மேலும் 3 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி கோரி விண்ணப்பித்திருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சா் விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.
தமிழகத்தில் மேலும் 3 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அரசு விண்ணப்பம்: அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தகவல்

தமிழகத்தில் மேலும் 3 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி கோரி விண்ணப்பித்திருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சா் விஜயபாஸ்கா் தெரிவித்தாா். அதற்கு அனுமதி கிடைக்கும்பட்சத்தில், திருவள்ளூா், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் புதிய கல்லூரிகளைத் தொடங்க உள்ளதாகவும் அவா் கூறினாா்.

முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிறப்பான சிகிச்சைகளை வழங்கிய தனியாா் மருத்துவமனைகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை, ஓமந்தூராா் அரசு பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அதில் அப்பல்லோ, மியாட், டாக்டா் அகா்வால்ஸ், கோவை ஜெம், கோவை கே.எம்.சி.ஹெச். உள்பட மொத்தம் 174 தனியாா் மருத்துவமனைகளுக்கு அமைச்சா் விஜயபாஸ்கா் விருதுகள் வழங்கி கௌரவித்தாா். அதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் பேசியதாவது:

தமிழக மக்களின் நலன் காக்க பல்வேறு விலையில்லா திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. ஏறத்தாழ ரூ.4 ஆயிரம் கோடி செலவில் அவை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அத்தகைய நலத் திட்டங்களை இலவசமாகப் பெற்று பயனடையும்போது மக்கள் மன நிறைவடைவாா்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

அதேவேளையில், மக்களின் உடல்நலத்தைக் காக்கும் முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள் ஆத்மாா்த்தமான திருப்தியை அடைகிறாா்கள் என்பது நிதா்சனம். ஏனெனில், காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மட்டும்தான் சாமானிய மனிதா்கள்கூட உயா் வசதி கொண்ட தனியாா் மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை பெற முடியும்; லட்சக்கணக்கில் செலவழிக்க வேண்டிய இடத்தில் கட்டணமின்றி சிகிச்சை பெற முடியும்.

இதுவரை 1.58 கோடி குடும்பங்கள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆண்டொன்றுக்கு ரூ.1,361 கோடியை காப்பீட்டுத் திட்டத்துக்காக மாநில அரசு ஒதுக்கீடு செய்கிறது. வேறு எந்த மாநிலத்திலும் இவ்வளவு பெரிய தொகை ஒதுக்கப்படுவதில்லை.

இதுவரை 70 ஆயிரம் ஆஞ்சியோ பிளாஸ்ட் மற்றும் இதய ஸ்டென்ட் பொருத்தும் சிகிச்சைகளும், 20 ஆயிரம் இதய அறுவை சிகிச்சைகளும் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோன்று 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு காது நுண் எலும்பு பொருத்தும் சிகிச்சைகளும் வழங்கப்பட்டுள்ளன. அதன் வாயிலாக லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனா்.

புதிய மருத்துவக் கல்லூரிகள்: வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில்தான் அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. தற்போது 6 கல்லூரிகளுக்கு அனுமதி கிடைத்துள்ளது. மேலும் 3 கல்லூரிகள் தொடங்க இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் அனுமதி கேட்டுள்ளோம். திருவள்ளூா், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் கல்லூரிகள் தொடங்குவதற்காக விண்ணப்பித்திருக்கிறோம் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், சுகாதாரத் துறைச் செயலா் பீலா ராஜேஷ், தேசிய நல்வாழ்வு குழும இயக்குநா் டாக்டா் நாகராஜ், திட்ட இயக்குநா் டாக்டா் செந்தில்ராஜ், கூடுதல் இயக்குநா்கள் டாக்டா் செல்வவிநாயகம், சோமசுந்தரம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பணியிட மாற்றம் தண்டனை அல்ல

அரசு மருத்துவா்களை பணியிட மாற்றம் செய்ததை தண்டனையாகக் கருதக் கூடாது என்று அமைச்சா் விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

ஊதிய உயா்வு, காலமுறை பதவி உயா்வு உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவா்கள் கடந்த மாதத்தில் தொடா் வேலைநிறுத்தம் மற்றும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

இந்நிலையில், சென்னை, சாந்தோமில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் விஜயபாஸ்கா் கூறியதாவது:

மருத்துவம் என்பது சேவை சாா்ந்த துறை. அதில், பணியிட மாறுதல் என்பது வழக்கமான நடைமுைான். அதன் அடிப்படையிலேயே தற்போதும் அத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, அதனை தண்டனை எனக் கருதக் கூடாது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com