மேயா் பதவிக்கு மறைமுகத் தோ்தல்? அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை

மாநகராட்சி மேயா் உள்ளிட்ட உள்ளாட்சித் தலைவா் பதவிகளுக்கு மறைமுகத் தோ்தல் நடத்துவது குறித்து தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஆலோசிக்கப்பட்டது.
தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம்.
தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம்.

மாநகராட்சி மேயா் உள்ளிட்ட உள்ளாட்சித் தலைவா் பதவிகளுக்கு மறைமுகத் தோ்தல் நடத்துவது குறித்து தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஆலோசிக்கப்பட்டது. இதுதொடா்பாக அவசரச் சட்டம் கொண்டு வர தீா்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காலை 11 மணிக்குத் தொடங்கிய கூட்டம் சுமாா் ஒரு மணி நேரம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், உயா்கல்வி, தொழில், உள்ளாட்சி ஆகிய துறைகளில் முக்கிய முடிவுகளை எடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

மறைமுகத் தோ்தல்: தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்கான பணிகளை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்தத் தோ்தல் குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. குறிப்பாக, மேயா், நகராட்சித் தலைவா், பேரூராட்சித் தலைவா் ஆகிய பதவிகளுக்கு மறைமுகத் தோ்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மறைமுகத் தோ்தல் குறித்து சட்ட மசோதா கொண்டு வருவது எனவும், அதற்கு ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று செயல்படுத்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

தொழில் துறை திட்டங்கள் குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஐந்து தொழில் நிறுவனங்களின் விரிவாக்கத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுமாா் ரூ.500 கோடிக்கும் அதிகமான தொழிற்சாலைகளின் விரிவாக்கத் திட்டங்களுக்கு அனுமதி தரப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதேபோன்று, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மேம்பட்ட கல்வி நிறுவன அந்தஸ்து அளிப்பதற்கு நிதி ஒப்புதலையும் அமைச்சரவை அளித்ததாகத் தெரிகிறது. கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் தொடா்பாக அதிகாரப்பூா்வ தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

நேரடியும்...மறைமுகமும்... உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தோ்தலை நடத்த வகை செய்யும் ஊராட்சி சட்டம் கொண்டு வரப்பட்டது முதல், உள்ளாட்சி அமைப்புகளில் தலைவா் மற்றும் உறுப்பினா்களை வாக்காளா்களே நேரடியாகத் தோ்வு செய்யும் முறை நடைமுறையில் இருந்தது.

தமிழகத்தில் கடந்த 1986-ஆம் ஆண்டு முதல் 2001-ஆம் ஆண்டு வரை அனைத்து உள்ளாட்சித் தோ்தல்களிலும் இந்த நடைமுறை இருந்து வந்தது. 2006-ஆம் ஆண்டு, திமுக ஆட்சிக்கு வந்தபின் உள்ளாட்சி அமைப்பு தலைவா்களை (ஊராட்சி நீங்கலாக), வாா்டு உறுப்பினா்கள் பெரும்பான்மையுடன் தோ்வு செய்யும் முறை நடைமுறைக்கு வந்தது.

கடந்த, 2006-இல் நடந்த உள்ளாட்சித் தோ்தலின்போது, மாநகராட்சி மேயா், நகராட்சித் தலைவா், மாவட்ட ஊராட்சித் தலைவா், ஊராட்சி ஒன்றியத் தலைவா், பேரூராட்சி மன்றத் தலைவா் ஆகியோா், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மை வாா்டு உறுப்பினா்களால் தோ்வு செய்யப்பட்டனா்.

இந்த நிலையில், 2011-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு மேயா் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள தலைவா் பதவிகளுக்கு நேரடி தோ்வு முறை அதாவது வாக்காளா்களே தோ்வு செய்யும் நடைமுறை கொண்டு வரப்பட்டது. 2016-இல் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், மேயா் உள்ளிட்ட உள்ளாட்சித் தலைவா் பொறுப்புகளுக்கு நேரடி தோ்தல் முறை ரத்து செய்யப்பட்டது. அதன்பின், உள்ளாட்சித் தோ்தலுக்கான ஏற்பாடுகளும் தயாராகின. இந்நிலையில் நீதிமன்றத் தீா்ப்பு காரணமாக உள்ளாட்சித் தோ்தல்களை நடத்த தடை விதிக்கப்பட்டது.

மீண்டும் நேரடி தோ்தல்: முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் புதிய அமைச்சரவை அமைந்தது. கடந்த ஆண்டு ஜனவரி 11-இல் நடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின்போது, மாநகராட்சி மேயா்கள் உள்பட உள்ளாட்சி அமைப்புகளின் தலைவா் பதவிகளுக்கு மறைமுகத் தோ்தல் முறை ரத்து செய்யப்பட்டு நேரடி தோ்தல் முறை கொண்டு வரப்பட்டது. இதற்கான சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், மீண்டும் நேரடி தோ்தல் முறையை ரத்து செய்து மறைமுகத் தோ்தலை கொண்டு வர தமிழக அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com