உள்ளாட்சித் தேர்தலுக்கும் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கும் எந்த தொடர்பும் இல்லை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

உள்ளாட்சித் தேர்தலுக்கும் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கும் எந்த தொடர்பும் இல்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 
உள்ளாட்சித் தேர்தலுக்கும் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கும் எந்த தொடர்பும் இல்லை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

உள்ளாட்சித் தேர்தலுக்கும் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கும் எந்த தொடர்பும் இல்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு தென்காசி, செங்கோட்டை, சங்கரன்கோவில் உள்ளிட்ட 8 தாலுக்காக்கள், 2 கோட்டங்கள் அடங்கிய புதிய மாவட்டம் அறிவிப்பு சமீபத்தில் அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து, தென்காசி மாவட்ட தொடக்க விழா, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, 5 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா தென்காசி இசக்கி மகால் வளாகத்தில் இன்று நடைபெற்றது. விழாவுக்கு துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தலைமை வகித்தார். அமைச்சா்கள் உதயகுமார், வி.எம்.ராஜலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர்.  

கூடுதல் தலைமைச் செயலா் அதுல்யமிஸ்ரா திட்ட விளக்க உரையாற்றினார். தென்காசி மாவட்டத்தின் நிர்வாக பணிகளை தொடங்கிவைத்து 5 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.100 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார். தென்காசி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் செல்வமோகன்தாஸ் பாண்டியன் மற்றும் அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள் பங்கேற்றனா். அதைத்தொடர்ந்து திருநெல்வேலியில் இருந்து புதியதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தை முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். தமிழகத்தின் 33-ஆவது மாவட்டம் தென்காசி ஆகும். 

விழாவில் முதல்வர் பேசுகையில், தென்காசி பகுதி மக்களின் 33 ஆண்டுகால கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தென்காசி புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். தென்காசி மக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய மாவட்ட தலைநகருக்கு 50 கிமீ தூரம் பயணம் செய்ய வேண்டியிருந்தது. இதனால் புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது. 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட 453 அறிவிப்புகளில் 368 அரசாணைகள் வழங்கப்பட்டுள்ளன. ராமநதி - ஜம்பு நதி இணைப்பு திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. செண்பகவல்லி அணை - கன்னியா மதகு பிரச்னைகளை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

தாமிரபரணி-நம்பியாறு-கருமேணி ஆறுகள் இணைப்பு திட்டம் 2020 டிசம்பர் 20ஆம் தேதி செயல்படுத்தப்படும். தமிழகத்திலுள்ள குளங்கள், குட்டைகள் என நீர்நிலைகள் அனைத்தும் தூர்வாரப்படும். நாடே வியக்கும் வகையில் தமிழகத்தில் குடிமராமத்து பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. ரூ.1 லட்சம் வரை சொத்து உள்ளவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிறப்பு குறைதீர் திட்டத்தின் கீழ் ஏழை மக்களிடம் பெறப்பட்ட மனுக்களை எந்த விதத்திலும் நிராகரிக்க கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி மத்திய அரசுடன் கூட்டணி வைத்து ஒரு குடும்பத்தை தான் வளர்த்தது. பாஜகவுடன் கூட்டணி வைத்து 5 மாத‌த்தில் 6 மருத்துக்கல்லூரிகள் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. 

கிருஷ்ணகிரி, நாகை, திருவள்ளூர் மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி அமைக்கும் திட்டம் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. தமிழகத்திற்கு பயன் தரும் மத்திய அரசு திட்டங்களை ஆதரிப்போம். மக்களை பாதிக்கக்கூடிய திட்டங்களை எதிர்ப்போம். உள்ளாட்சித் தேர்தலுக்கும் புதிய மாவட்டங்கள் உருவாக்குவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மக்களின் கோரிக்கைப்படி நெல்லையில் இருந்து பிரித்து தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்கு சிலர் முட்டுக்கட்டை போடுகின்றனர். ஆனால் உள்ளாட்சித் தேர்தல் நிச்சயம் நடக்கும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com