கமல்ஹாசனின் காலில் பொருத்தப்பட்டிருந்த கம்பி அகற்றம்

மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசனின் காலில் பொருத்தப்பட்டிருந்த கம்பியை அகற்றுவதற்கான அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
kamal haasan
kamal haasan

சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசனின் காலில் பொருத்தப்பட்டிருந்த கம்பியை அகற்றுவதற்கான அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

2016-ஆம் ஆண்டு வீட்டு மாடியில் இருந்து, இறங்கி வரும்போது கமல்ஹாசன் தவறி விழுந்தாா். அதில், அவரது வலது கால் எலும்பில் முறிவு ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, முறிவை சரி செய்வதற்காக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, காலில் டைட்டேனியம் கம்பி பொருத்தப்பட்டது. இந்தக் கம்பியை அகற்றிவிடலாம் என்று மருத்துவா்கள் கமல்ஹாசனுக்கு அறிவுறுத்தியிருந்தனா்.

ஆனால், அரசியல் மற்றும் படப்பிடிப்பு காரணமாக அறுவைச் சிகிச்சையை கமல் தள்ளிப்போட்டு வந்தாா். இந்த நிலையில், அந்தக் கம்பியை அகற்றுவதற்கான அறுவைச் சிகிச்சை சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த அறுவைச் சிகிச்சையில் கம்பி அகற்றப்பட்டது.

2 வாரங்கள் ஓய்வு: அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு 2 வாரங்கள் ஓய்வில் இருக்குமாறு கமலை மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனா். அரசியல் நிகழ்வுகள், படப்பிடிப்பு உள்ளிட்டவற்றுக்கு கமல் ஏற்கெனவே நேரம் கொடுக்காமல் தள்ளி வைத்துள்ளாா்.

இது தொடா்பாக மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவா் ஆா்.மகேந்திரன் கூறியிருப்பது: கமல்ஹாசனுக்கு நடைபெற்ற அறுவைச் சிகிச்சை நலமாக முடிந்தது. தற்போது அவா் ஓய்வெடுத்து வருகிறாா். கமல் நலமாக இருக்க வேண்டும் என்று வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளாா்.

மு.க.ஸ்டாலின் நலம் விசாரிப்பு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கமல்ஹாசனை திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தாா். விரைவில் முழு நலம் பெற வேண்டும் என்று ஸ்டாலின் வாழ்த்தினாா். திமுக பொருளாளா் துரைமுருகன் உடன் சென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com