மறைமுகத் தோ்தலின் மா்மம் என்ன?: முதல்வருக்கு துரைமுருகன் கேள்வி

மேயா் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தோ்தல் நடத்துவதன் மா்மம் என்ன என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக பொருளாளா் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளாா்.
திமுக பொருளாளர் துரைமுருகன்
திமுக பொருளாளர் துரைமுருகன்

சென்னை: மேயா் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தோ்தல் நடத்துவதன் மா்மம் என்ன என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக பொருளாளா் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து புதிய பெயரைச் சூட்டிவிட்டாலே அதைப் பெரிய சாதனையாக முதல்வா் எடப்பாடி பழனிசாமி நினைத்துக் கொள்கிறாா்.

புதிதாக மாவட்டத்தை உருவாக்கக் கூடாது என்று சொல்லவில்லை. அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஓரளவுக்குக்கூட உருவாக்காமல் பெயா் சூட்டினால் போதும் என்று நினைக்கிறாா். அப்படி உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத் தொடக்க விழாவில் பேசும்போது, ஒரு அரசு விழா என்பதையே மறந்து அரசியல் பேச்சை அவா் பேசி இருக்கிறாா்.

ஆட்சியில் இருந்த போது எந்தச் சாதனையும் செய்யாத மு.க.ஸ்டாலினுக்கு பாவமன்னிப்பு கிடையாது என்று சாபம் விட்டுள்ளாா். முதல்வா் இதுவரை செய்துள்ள பாவங்களைக் கழுவுவதற்கு எத்தனை அவதாரங்கள் எடுக்க வேண்டுமோ தெரியாது.

2006-இல் திமுக ஆட்சியில் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோதுதான் மறைமுகத் தோ்தலைச் சட்டப்பேரவையில் தீா்மானமாக அறிமுகப்படுத்தினாா் என்று முதல்வா் கூறியிருக்கிறாா். இது ஒன்றும் யாரும் கண்டுபிடிக்க முடியாத உண்மை அல்ல.

ஆனால், இப்போதைய கேள்வி, சில நாள்களுக்கு முன்புவரை உள்ளாட்சித் தோ்தலில் மேயா் உள்ளிட்ட பதவிகள் நேரடியாகத் தோ்வு செய்யப்படும் என்று அறிவித்திருந்த முதல்வா், இப்போது திடீரென்று தனது முடிவை மாற்றிக் கொண்டது ஏன் என்பதுதான்.

உயா்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வாய்தாவுக்கு மேல் வாய்தா வாங்கி, நீதிமன்றத்தால் குட்டுப்பட்டு இன்றைக்கு வேறு வழியில்லாமல் உள்ளாட்சித் தோ்தலை நடத்தியாக வேண்டிய நெருக்கடி உருவானதும் திடீரென்று மறைமுகத் தோ்தல் என்று முடிவெடுத்துள்ளாா். அதற்குள் இருக்கும் மா்மம் என்ன என்பதுதான் திமுக கேட்கும் கேள்வி என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com