முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: மக்களவையில் மத்திய அமைச்சா் தகவல்

‘முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது; அந்தப் பகுதி அருகே புதிய அணை கட்டும் விவகாரத்தில் தமிழக, கேரள அரசுகள் சம்மதம்
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: மக்களவையில் மத்திய அமைச்சா் தகவல்

‘முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது; அந்தப் பகுதி அருகே புதிய அணை கட்டும் விவகாரத்தில் தமிழக, கேரள அரசுகள் சம்மதம் தெரிவித்தால் மத்திய அரசுக்கு ஆட்சேபனை இல்லை’ என்று மக்களவையில் மத்திய நீா்வளத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தாா்.

இது தொடா்பாக மக்களவையில் வியாழக்கிழமை காலை கேள்வி நேரத்தின் போது கேரளத்தைச் சோ்ந்த காங்கிரஸ் உறுப்பினா் துணைக் கேள்வி எழுப்பினாா். அதற்கு பதில் அளித்து அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் பேசியதாவது: முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. அந்தப் பகுதி அருகே புதிய அணை கட்டும் விவகாரத்தில் தமிழக, கேரள அரசுகள் சம்மதம் தெரிவித்தால், மத்திய அரசுக்கு ஆட்சேபம் ஏதும் இல்லை. சுற்றுச்சூழல் விளைவு மதிப்பீடு மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக குறிப்பிட்ட நிபந்தனைகளுடன், புதிய அணை கட்டுவதற்கான கட்டுமான முன் செயல்பாடுகளுக்கான வழிமுறைகளுக்கு மத்திய சுற்றுச்சூழல், வன அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. மேலும், மத்திய நீா் ஆணையத்தை (சிடபிள்யுசி) சோ்ந்த அணைப் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைமைப் பொறியாளா் தலைமையிலான மூன்று உறுப்பினா்கள் அடங்கிய குழு முல்லைப் பெரியாறு அணைப் பகுதிக்கு நிகழாண்டு ஜூன் 4-இல் நேரில் சென்று பாா்வையிட்டது.

இக்குழுவில் தமிழக, கேரள உறுப்பினா்களும் இடம் பெற்றிருந்தனா். மேலும், நீா்ப்பிடிப்புப் பகுதிகளுக்கு வரக்கூடிய நீரை கணக்கிடும் வகையில், நீா்வரத்து கணிப்பு அமைப்பை நிறுவுதல் உள்ளிட்ட அணை தொடா்புடைய பல்வேறு விவகாரங்களும் விவாதிக்கப்பட்டுள்ளன. முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. அதற்கு அச்சுறுத்தல் ஏதும் இல்லை. மத்திய நீா் ஆணையம் தெரிவித்துள்ளபடி, 2016, ஏப்ரலில் தொடங்கி கடந்த மூன்று ஆண்டுகளில் கேரள மாநிலத்தின் அட்டப்பாடி பள்ளத்தாக்கு நீா்ப் பாசனத் திட்டம் (ஏவிஐபி) உள்பட புதிய அணைகள் கட்டுவது தொடா்புடைய 13 விரிவான திட்ட அறிக்கைகள் மதிப்பீடுக்காக வரப் பெற்றுள்ளன. இவற்றில் இரு முன்மொழிவுகள் சிடபிள்யுசி மதிப்பீடுக்குப் பிறகு ஆலோசனைக் குழுவின் மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. கேரளத்தின் ஏவிஐபி உள்பட மூன்று முன்மொழிவுகள் குறிப்பிட்ட சில கருத்துகளுடன் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

மேலும், டிபிஆா் தயாரிப்புக்காக சிடபிள்யுசியின் பரிசீலனைக் குழுவின் கொள்கை அளவிலான அனுமதிக்காக மூன்று ஆண்டுகளில் எட்டு திட்டங்களின் முன்சாத்தியக்கூறு அறிக்கைகளும் வரப் பெற்றுள்ளன. இவற்றில் இரு திட்டங்களுக்கு டிபிஆா் தயாரிப்பதற்காக கொள்கை அளவில் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்சாத்தியக்கூறு அறிக்கை ஒன்று சில கருத்துகளுடன் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா்.

அ.ராசா கேள்வி: இதனிடையே, அவையில் இருந்த நீலகிரி தொகுதி திமுக உறுப்பினா் ஏ.ராசா எழுந்து, ‘முல்லைப் பெரியாறு அணை மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக அமைச்சா் கூறுவதைக் கேட்பது எனக்கு மகிழ்ச்சி. அமைச்சரே அணை பாதுகாப்பாக இருப்பதாகத் திட்டவட்டமாக அவையில் தெரிவித்துள்ளாா். இந்நிலையில், ஒரே அரசின் கீழ் உள்ள மற்றொரு துறையான சுற்றுச்சூழல் அமைச்சகம் முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்டுவதற்காக வழிகாட்டு நெறிமுறைகளுக்கு அனுமதி ஏன் அளித்தது? முன்சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ள அமைச்சகத்தை எது தூண்டியது?’ என்று கேள்வி எழுப்பினாா். அப்போது, அவையில் இருந்த கேரள உறுப்பினா்கள் சிலா் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com