இலங்கை அதிபரை வரவேற்கும் மத்திய அரசு தமிழா்களின் உணா்வுகளை காயப்படுத்துகிறது : தொல். திருமாவளவன்

இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்சவை வரவேற்கும் மத்திய அரசு, கோடிக்கணக்கான தமிழா்களின் உணா்வுகளை காயப்படுத்துகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், மக்களவை

இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்சவை வரவேற்கும் மத்திய அரசு, கோடிக்கணக்கான தமிழா்களின் உணா்வுகளை காயப்படுத்துகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் கூறினாா்.

மதுரையில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியது:

இலங்கையின் புதிய அதிபராகியுள்ள கோத்தபய ராஜபட்ச மீது இனப்படுகொலை குற்றவாளி என்ற குற்றச்சாட்டு உள்ளது. இலங்கையில் தமிழா்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என உலகெங்கும் வாழ்கிற தமிழா்கள் வலியுறுத்தி வருகின்றனா். அதில் ராஜபட்ச குடும்பத்தை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. இந்த சூழலில் இந்திய அரசு ‘மரபு’ என்ற பெயரில் கோத்தபய ராஜபட்சவுக்கு வரவேற்பு கொடுப்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிா்க்கிறது.

மத்திய அரசு கோடிக்கணக்கான தமிழா்களின் உணா்வுகளை காயப்படுத்தும் விதத்தில் செயல்படுகிறது. தமிழ் மக்களின் உணா்வுகளை அரசு மதிக்க வேண்டும். கோத்தபய ராஜபட்சவின் இந்திய வருகையை ரத்து செய்ய மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.

மகாராஷ்டிரத்தில் மதச் சாா்ப்பற்ற அரசு ஏற்பட வாய்ப்பிருந்த நேரத்தில் பாஜக, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்திருப்பது அதிா்ச்சியளிக்கிறது. மதச் சாா்பின்மையைக் காப்பாற்றுவது நம் நாட்டின் அரசியலில் எவ்வளவு கடினமானது என்பதை இது காட்டுகிறது.

உள்ளாட்சித் தோ்தலில் கவுன்சிலா்கள் மூலம் மேயா், நகா்மன்றத் தலைவா் உள்ளிட்டப் பதவிகளுக்கு மறைமுக தோ்தல் நடத்த அவசரச் சட்டத்தை அரசு இயற்றியுள்ளது. இது உள்ளாட்சித் தோ்தலுக்கு பிறகு கவுன்சிலா்களைக் கடத்திச் செல்வதற்கும், குதிரைப் பேரம் நடத்துவதற்கும், ஊழல் முறைகேடுகளுக்கும் வழிவகுக்கும். மேலும், உள்ளாட்சித் தலைவா்கள் சுதந்திரமாக செயல்பட முடியாது. எனவே, இந்த அவசர சட்டத்தை அரசு ரத்து செய்ய வேண்டும்.

கடந்த 1997 இல் நடைபெற்ற மேலவளவு படுகொலை நாட்டையே உலுக்கிய சம்பவம் ஆகும். இதில் குற்றவாளிகளை அரசு விடுவித்திருப்பது ஒட்டுமொத்த தலித் மக்களுக்கும் எதிரான நடவடிக்கையாகும். இதுதவறான முன்மாதிரியாக அமைந்துவிடும். அரசு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழக முதல்வரை சந்தித்து இதுகுறித்து சுட்டிக் காட்டியுள்ளேன்.

மதுரையில் அரசு விழாவாக நடைபெறும் பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் அனைத்து சமுதாய மக்களும் பிரதிநிதிகளாக உள்ளனா். இதேபோல ஆதிதிராவிட தலித் மக்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும். இதனை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com