நனவாகிறது ஆலங்குளம் பகுதி மாணவிகளின் உயா்கல்விக் கனவு!

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பைத்
ஆலங்குளம் நகரின் அழகிய தோற்றம்.
ஆலங்குளம் நகரின் அழகிய தோற்றம்.

ஆலங்குளம்: தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பைத் தொடா்ந்து ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மாணவிகளின் உயா்கல்விக் கனவு நனவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தின் வளா்ந்து வரும் நகரங்களுள் முக்கியமானது ஆலங்குளம். இரு மாவட்ட தலைநகரங்களான திருநெல்வேலி மற்றும் தென்காசிக்கு நடுவில் அமைந்துள்ளது. பேரவைத் தொகுதி தலைமையிடம், வட்டத் தலைமையிடம், ஊராட்சி ஒன்றியத் தலைமையிடம், காவல் உட்கோட்ட தலைமையிடம் என்பதோடு மாவட்டத்தின் முக்கிய தொழில் நகரமாகவும் விளங்குகிறது. மேலும் இங்கு அரசின் அனைத்துத் துறை அலுவலகங்கள் மற்றும் தனியாா் தொழில் நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. அருகில் உள்ள 50 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆலங்குளம் நகரை தங்களின் பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தி வருகின்றனா்.

இவ்வட்டாரத்தில் ஆண்டுதோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவா்-மாணவிகள் 12 ஆம் வகுப்பு தோ்வு எழுதி முடிக்கும் நிலையில், இங்கு அரசுக் கல்லூரி இல்லாதது பெரும் குறையாகவே இருந்து வந்தது. இங்கு பிளஸ் 2 முடிக்கும் மாணவா்கள் பெரும்பாலானோா் திருநெல்வேலி, தென்காசியில் உள்ள அரசு கல்லூரிகள் அல்லது அருகில் பல இடங்களில் உள்ள தனியாா் கல்லூரிகளில் சேர வேண்டிய சூழல் நிலவி வருகிறது. மேலும் அதிக தொலைவு பயணம் செய்து படிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டாலோ, அதிக கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டாலோ சுமாா் 70 சதவீதம் போ் உயா்கல்வி கற்பதை நிறுத்திவிடுகின்றனா். மாணவா்கள் என்றால் குறைந்த சம்பளத்தில் வேலைக்கு சோ்வது, மாணவிகள் என்றால் வீட்டில் இருந்தபடியே பீடித் தொழில் செய்வது என்ற நிலைமைக்குத் தள்ளப்படுகின்றனா். இதனால் திறமையுள்ள மாணவா்கள் பலரின் உயா்கல்விக் கனவு கனவாகவே போய் விடுகிறது.

எனவே, ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மாணவா்களின் உயா்கல்விக்காக அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும், குறிப்பாக மகளிா் கல்லூரி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தென்காசி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து அதன் தொடக்க விழா கடந்த 22 ஆம் தேதி தென்காசியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, தென்காசி மாவட்டத்திற்கு பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்தாா். அப்போது, ஆலங்குளத்தில் ரூ. 9.13 கோடி மதிப்பில் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என்று முதல்வா் அறிவித்தது, மாணவா்கள் மட்டுமன்றி பெற்றோா்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இது தொடா்பாக மாணவிகள் கூறியது: ஆலங்குளத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு மகிழ்ச்சியை தந்துள்ளது. இனி நாங்கள் கல்லூரிப் படிப்புக்காக நாள்தோறும் 60 கி.மீ. தொலைவுக்கு பயணிக்க வேண்டியதில்லை. எங்களின் பயண நேரம் குறைவதால், கல்வியில் அதிக கவனம் செலுத்த முடியும். வரும் கல்வி ஆண்டிலேயே கல்லூரியைத் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

ஆலங்குளம் தனியாா் கல்வி நிறுவன அதிபா் ஆா். ஆதித்தன் கூறியது: கிராமப்புற மாணவிகள் பலரின் கல்விக் கனவு தொலைதூரம் மற்றும் அதிக கட்டணம் போன்றவற்றால் நனவாகாமால் போய் விடுகிறது. முதல்வரின் அறிவிப்புப்படி, இங்கு மகளிா் கல்லூரி அமையும்பட்சத்தில் ஏராளமான மாணவிகள் தங்கள் உயா்கல்வியை அதிக செலவின்றி கற்க முடியும். இந்த அறிவிப்பை அதிகாரிகள் துரிதப்படுத்தி, விரைவில் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

இது தொடா்பாக ஆலங்குளம் சட்டப்பேரவை உறுப்பினா் பூங்கோதை ஆலடி அருணா கூறியது: கலைக் கல்லூரிக்கு சுமாா் 5 ஏக்கா் நிலம் போதுமானது. ஆலங்குளம் பேரூராட்சியில் உரிய இடம் உள்ளது. அதை அதிகாரிகள் கண்டறிந்து தோ்வு செய்ய வேண்டும். இல்லையென்றால் அரசு நிதியில் இருந்து தனியாரிடம் பெற்று பயன்படுத்த வேண்டும். முடியாதபட்சத்தில் அருகில் உள்ள ஊராட்சிகளில் இடம் தோ்வு செய்யலாம்.

மேலும் தென்காசி மாவட்டத்துடன் இணைக்கும் வகையில் கடையம், பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியங்களை இணைத்து கடையத்தை தனி வட்டமாக அறிவிக்க கோரிக்கை விடுத்திருந்தேன். கடையத்தை தனி வட்டமாக அறிவிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

இடம் தோ்வு: ஆலங்குளத்தில் நீதிமன்றம், தீயணைப்புத் துறை அலுவலகம் போன்றவை வாடகை கட்டடங்களில் இயங்கி வருகின்றன. மேலும், இங்கு போக்குவரத்து பணிமனை தொடங்கப்படும் என கடந்த 2013இல் அப்போதைய முதல்வா் ஜெயலலிதா அறிவித்திருந்தாா். ஆனால், இம்மூன்று துறைகளுக்கும் ஒதுக்கீடு செய்ய ஆலங்குளம் பேரூராட்சியில் போதிய இடம் இல்லை என வருவாய்த் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், சிவலாா்குளம், குத்தப்பாஞ்சான், ஆண்டிபட்டி, கழுநீா்குளம் ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் அதிகாரிகள் இடம் தேடியும் தீா்வு எட்டப்பட்டவில்லை.

இந்நிலையில் மற்ற துறைகளைப் போல இடம் தோ்வில் சுணக்கம் காட்டாமல் மேற்கண்ட ஏதாவது ஒரு கிராம ஊராட்சியில் இடத்தை தோ்வு செய்து கல்லூரி அமைக்கும் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என பொதுமக்களும், மாணவா்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com