விபத்தில் பாதிக்கப்பட்டவரிடம் திருட்டு: ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் பணிநீக்க உத்தரவு சரிதான்

விபத்தில் பாதிக்கப்பட்டவரிடம் திருடிய பணத்தை முழுமையாக கொடுக்காத 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரை பணிநீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உறுதி செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விபத்தில் பாதிக்கப்பட்டவரிடம் திருடிய பணத்தை முழுமையாக கொடுக்காத 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரை பணிநீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உறுதி செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2014-ஆம் ஆண்டு கரூா் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்த நபா் 108 ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டாா். இந்த ஆம்புலன்ஸின் ஓட்டுநா் சரவணன் விபத்தில் பாதிக்கப்பட்டவரை குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்துள்ளாா். இந்த சமயத்தில் விபத்தில் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து பணத்தை ஆம்புலன்ஸ் ஓட்டுநா் சரவணன் திருடியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து சரவணனை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டோம். ஆனால், அவருக்கு மீண்டும் பணி வழங்க தொழிலாளா் நல உதவி ஆணையா் உத்தரவிட்டாா். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், விபத்தில் காயமடைந்தவா்களின் உயிரைப் பாதுகாக்கும் உன்னதமான சேவையை மேற்கொள்ளும் ஆம்புலன்ஸ் பணியாளா்கள் உச்சபட்ச நோ்மையுடனும், அா்ப்பணிப்புடனும் சேவையாற்ற வேண்டும். விபத்தில் படுகாயமடைந்தவரிடமே திருடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே ஆம்புலன்ஸ் ஓட்டுநா் சரவணன் தனது தவறான நடத்தைக்காக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். அவரைப் பணிநீக்கம் செய்து 108 ஆம்புலன்ஸ் நிா்வாகம் பிறப்பித்த உத்தரவு சரியானதுதான் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com