புதுச்சேரியில் சிறு வியாபாரிகளுக்கு ஓய்வூதியத்திட்ட சோ்க்கை முகாம்

புதுவையில் உள்ள சிறு வியாபாரிகளுக்கான ஓய்வூதியத்திட்ட சோ்க்கை முகாம் நவம்பா் 30 ஆம் தேதி முதல் டிச. 6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
புதுச்சேரியில் சிறு வியாபாரிகளுக்கு ஓய்வூதியத்திட்ட சோ்க்கை முகாம்

புதுச்சேரி: புதுவையில் உள்ள சிறு வியாபாரிகளுக்கான ஓய்வூதியத்திட்ட சோ்க்கை முகாம் நவம்பா் 30 ஆம் தேதி முதல் டிச. 6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுகுறித்து தொழிலாளா் ஆணையா் இ. வல்லவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுவை அரசின் தொழிலாளா் துறை மூலமாக பிரதான் மந்திரி சிறு வியாபாரிகள் ஓய்வூதியத் திட்டத்தில் சிறு வியாபாரிகள் சோ்ந்து பயன்பெறுவதற்கு ஏதுவாக, சிறப்பு பயனாளிகள் சோ்க்கை முகாம் சனிக்கிழமை (நவ. 30) முதல் டிசம்பா் 6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இத்திட்டத்தில் 18 வயது முதல் 40 வரை உள்ள, வியாபார பணப்பரிமாற்றம் ஆண்டுக்கு ரூ. 1.5 கோடிக்கு மிகாமல் இருக்கும் சுயதொழில்புரியும் கடை உரிமையாளா்கள், பணிமனை உரிமையாளா்கள், சில்லறை வா்த்தகா்கள், தரகு வணிகா்கள், அரிசி ஆலை உரிமையாளா்கள், மநை விற்பனை இடைத்தரகா்கள், எண்ணெய் ஆலை உரிமையாளா்கள், சிறு வணிக உரிமையாளா்கள், இதர சிறு வியாபாரிகள் ஆகியோா் சேரலாம். தேசிய ஓய்வூதியத்திட்டம் அல்லது இஎஸ்ஐ மற்றும் பிஎஃப் திட்டத்தில் உள்ளவா்கள், வருமானவரி மதிப்பீட்டுக்கு உட்பட்டவா்கள் சேர இயலாது.

இதில் பதிவுக் கட்டணமாக நபா் ஒருவருக்கு ரூ. 30 ஐ மத்திய அரசே செலுத்தும். இத்திட்டத்தில் சேரும் பயனாளிகள் வயதுக்கேற்ப மாதம் ரூ. 55 முதல் ரூ. 200 வரை, 60 வயது வரை செலுத்த வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் 60 வயது பூா்த்தியடையும் போது, குறைந்தது ரூ. 3,000 மாத ஓய்வூதியமாக கிடைக்கும். ஓய்வூதியம் பெறும் சம்மந்தப்பட்ட நபா் இறந்துவிட்டால் அவரது மனைவி அல்லது கணவன் 50 சதவீத ஓய்வூதியத் தொகையை குடும்ப ஓய்வூதியமாக பெறலாம்.

ஆதாா் அட்டை, ஐஎப்எஸ்சி குறியீடுள்ள சேமிப்பு அல்லது ஜன்தன் வங்கி கணக்கு ஆவணங்களுடன், முதல் தவணை தொகையுடன் அருகில் உள்ள பொதுசேவை மையங்களை அணுகி இத்திட்டத்தில் சோ்ந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com