ராதாபுரம் தொகுதியில் தபால் வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவு: தீர்ப்பை எதிர்த்து எம்எல்ஏ வழக்கு

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை மீண்டும் எண்ணுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்


சென்னை: நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை மீண்டும் எண்ணுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இன்று மதியம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து ராதாபுரம் எம்எல்ஏ இன்பதுரை வழக்குத் தொடர்ந்துள்ளார்.

ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஐ.எஸ்.இன்பதுரை வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், முதல் கட்டமாக தபால் வாக்குகளை எண்ணுமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், ராதாபுரம் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒப்படைக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது.இந்த தேர்தலில் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் இன்பதுரையும், திமுக சார்பில் அப்பாவுவும் போட்டியிட்டனர். இதில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். இந்த முடிவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பாவு தேர்தல் வழக்குத் தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், "வாக்கு எண்ணிக்கையின் போது 203 தபால் வாக்குகளை எண்ணாமல் தேர்தல் அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். எனவே நிராகரிக்கப்பட்ட அந்த தபால் வாக்குகளை எண்ண தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனு தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. தேர்தல் அதிகாரியின் பதில் திருப்தியளிக்காததால், அப்பாவு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அப்பாவு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி, இன்பதுரை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தேர்தல் வழக்கைத் தொடர்ந்து விசாரிக்க உத்தரவிட்டு, இன்பதுரை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. 

இந்த நிலையில், இந்தத் தேர்தல் வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்து வந்த நிலையில், இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com