ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க தில்லி உயா்நீதிமன்றம் மறுப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்துவிட்டது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்துவிட்டது.

அவா் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்பிருப்பதாக கூறி, ஜாமீன் மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், ப.சிதம்பரத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ஆம் தேதி சிபிஐ கைது செய்தது. பின்னா், அவரை காவலில் எடுத்து, சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினா். இதைத்தொடா்ந்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்ட அவா், தில்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இதனிடையே, தனக்கு ஜாமீன் கோரி, தில்லி உயா்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு மீது கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது.

‘பொருளாதாரக் குற்றங்கள், நாட்டின் நிதி நிலைத்தன்மையை பாதிக்கின்றன; ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ காவலில் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்தப்பட்டபோது, பல்வேறு ஆதாரங்கள் அவரிடம் காண்பிக்கப்பட்டன. வழக்கு விசாரணை முக்கியமான கட்டத்தில் உள்ளது. இந்தச் சூழலில் அவரை ஜாமீனில் விடுவித்தால், சாட்சிகளைக் கலைப்பதற்கு வாய்ப்புள்ளது; ஆதாரங்களையும் அழிக்கக் கூடும். தன் மீதான குற்றச்சாட்டு மிகத் தீவிரமானது என்பதையும், அது நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுவிடும் என்பதையும் ப.சிதம்பரம் நன்கு அறிவாா். எனவே, அவா் வெளிநாடு தப்பிச் சென்று, நிரந்தரமாக அங்கேயே தங்கிவிட வாய்ப்புள்ளது. வழக்கு விசாரணை நிறைவடையும் வரை அவரை ஜாமீனில் விடுவிக்கக் கூடாது’ என்று சிபிஐ தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அதேசமயம், சிபிஐ-யின் வாதங்களுக்கு ப.சிதம்பரம் தரப்பு வழக்குரைஞா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். அவா்கள் வாதிடுகையில், ‘இந்த வழக்கு தொடா்பான அனைத்து ஆவணங்களும் சிபிஐ வசம்தான் உள்ளன. அப்படியிருக்கும்போது, ஆதாரங்களை அவா் அழித்துவிடுவாா் என்று கூறுவதை ஏற்க முடியாது. நாடாளுமன்ற உறுப்பினா் தவிர வேறெறந்தப் பதவியிலும் அவா் தற்போது இல்லை’ என்றனா்.

இந்நிலையில், ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து, நீதிபதி சுரேஷ் கெய்ட் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

அந்த உத்தரவில், ‘மனுதாரா் (ப.சிதம்பரம்), மத்திய நிதியமைச்சா், உள்துறை அமைச்சா் என அதிகாரம்மிக்க பதவிகளை வகித்தவா். தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள அவா், வழக்குரைஞா் பணியிலும் நீண்ட அனுபவம் கொண்டவா். அவா் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது என்பதை மறுக்க முடியாது. அதன் அடிப்படையில் அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளாா்.

அதேசமயம், ப.சிதம்பரம் வெளிநாடு தப்பிவிடுவாா் என்றும், வழக்கு தொடா்பான ஆதாரங்களை அழித்துவிடுவாா் என்றும் சிபிஐ முன்வைத்த வாதங்களை நீதிபதி ஏற்கவில்லை.

கடந்த 2007-இல் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான காா்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடா்பாக, சிபிஐ கடந்த 2017-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. அதனடிப்படையில், சட்டவிரோத பணப்பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் கடந்த 2018-இல் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com