திமுகவை மக்கள் ஆதரிக்க வேண்டும்: கனிமொழி பிரசாரம்

தமிழகத்தில் செயல்படாத அதிமுக அரசுக்கு பாடம் புகட்டும் பொருட்டு, இடைத் தேர்தலில் திமுகவை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்று அந்தக் கட்சியின் மகளிரணிச் செயலர் கனிமொழி எம்பி பேசினார்.
திமுகவை மக்கள் ஆதரிக்க வேண்டும்: கனிமொழி பிரசாரம்

தமிழகத்தில் செயல்படாத அதிமுக அரசுக்கு பாடம் புகட்டும் பொருட்டு, இடைத் தேர்தலில் திமுகவை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்று அந்தக் கட்சியின் மகளிரணிச் செயலர் கனிமொழி எம்பி பேசினார்.
 விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே மூங்கில்பட்டில் சனிக்கிழமை மாலை திமுக வேட்பாளர் நா.புகழேந்தியை ஆதரித்து கனிமொழி எம்பி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
 விக்கிரவாண்டி தொகுதி திமுக வெற்றி பெற்ற தொகுதி. மறைந்த எம்எல்ஏ கு.ராதாமணியைப் போல, புகழேந்தியும் மக்களுக்கான திட்டங்களை கொண்டுவரப் பாடுபடுவார்.
 இடைத் தேர்தல் என்பது மாநில ஆட்சியின் செயல்பாடுகளுக்கு மக்கள் தர மதிப்பீடு வழங்குவது போன்றது.
 தமிழகத்தில் தற்போது நடைபெறுவது ஊழல் மிகுந்த, செயல்படாத அரசு. முதல்வர் பழனிசாமி சென்னையில் முதலீட்டாளர் மாநாடு நடத்தியும், வெளிநாடு சென்று வந்தும் தமிழகத்துக்கு தொழிற்சாலைகள் வரவில்லை.
 ஆட்சி நன்றாக இருந்தால் தொழில் முதலீடுகள் தேடி வரும். கருணாநிதி, தனது ஆட்சி காலத்தில் எந்த வெளிநாட்டுக்கும் செல்லாமலேயே தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளைக் கொண்டு வந்தார்.
 தமிழக அரசை பிரதமர் மோடி நடத்துகிறார். மத்திய அரசு வழங்கிய நிதியை செலவிடாத ஒரே மாநிலம் தமிழகம்தான். ரூ.3,677 கோடி நிதி, பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
 "நீட்' தேர்வு வந்தால் கல்வித் தரம் உயரும் என்றனர். ஆனால், போலி நபர்கள்தான் வந்துள்ளனர். தமிழகத்தில் மருத்துவப் படிப்பு சேர்க்கையில் ஆள்மாறாட்டத்தை கண்டறிந்தவர்கள், நாடு முழுவதும் ஏன் விசாரணை நடத்தவில்லை? தமிழகத்தில் மருத்துவ ஒதுக்கீடு இடங்களைப் பெறும் வெளி மாநிலத்தவர்கள், முறையாக தேர்வானவர்களா என விசாரிக்கப்பட வேண்டும். இதை கேட்கக் கூட திராணியின்றி தமிழக அரசு உள்ளது.
 ஆகவே, செயல்படாத இந்த அரசை வெளியேற்ற அச்சாரமாக திமுகவை மக்கள் ஆதரிக்க வேண்டும். ஆளும் அதிமுக அரசுக்கு தக்க பாடத்தை புகட்ட வேண்டும் என்றார்.
 தொடர்ந்து, மதுரப்பாக்கம், ராதாபுரம், பனையபுரம், முண்டியம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில், திமுக வேட்பாளரை ஆதரித்து, அவர் திறந்த வேனில் பிரசாரம் செய்தார்.
 முன்னாள் அமைச்சர்கள் க.பொன்முடி, ஜெகத்ரட்சகன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஒன்றியச் செயலர் ரவிதுரை, எத்திராஜ், ரகுபதி, ராஜசேகர், சங்கர், வெங்கடேசன், சபரிமுத்து உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com