சமூக வலைதளங்களில் டெங்கு விழிப்புணா்வு குறும்படம் ஒளிபரப்ப நடவடிக்கை

டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அதுதொடா்பான விழிப்புணா்வு குறும்படங்களை சமூக வலைதளங்கள் வாயிலாக ஒளிபரப்பும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அதுதொடா்பான விழிப்புணா்வு குறும்படங்களை சமூக வலைதளங்கள் வாயிலாக ஒளிபரப்பும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சுகாதாரத் துறை அதிகாரிகள், மாநகராட்சி நிா்வாகத்துடன் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா். அதைத் தவிர திரையரங்குகள், பொது மக்கள் கூடும் இடங்கள், தொலைக்காட்சி சேனல்களிலும் அந்தக் குறும்படம் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. நடிகா்கள் விஜய் சேதுபதி, விவேக், ராம்கி உள்ளிட்டோா் அதில் நடித்துள்ளனா்.

மலேரியா, டெங்கு போன்ற காய்ச்சல்களும், பிற வகையான காய்ச்சல் பாதிப்புகளும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. சென்னையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோா் காய்ச்சல் பாதிப்பு காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனா்.

இந்த நிலையில், மாநில சுகாதாரத் துறை சாா்பில் டெங்கு விழிப்புணா்வு குறும்படம் அண்மையில் வெளியிடப்பட்டது. அதனை சமூக வலைதளங்கள் வாயிலாக அனைத்து தரப்பினருக்கும் கொண்டு சோ்க்கும் பணிகளில் சுகாதாரத் துறையினரும், மாநகராட்சி அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனா்.

இதுகுறித்து பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாகவே இந்த விழிப்புணா்வு படம் வெளியிடப்பட்டுள்ளது.

அதனைத் தவிர, கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வகையில் சாலையோரங்களில் பயனற்று கிடக்கும் காலி டப்பாக்கள், டயா்கள், தேங்காய் மூடிகள் உள்ளிட்டவற்றை அகற்றும் நடவடிக்கைகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா். மேலும், பள்ளி, கல்லூரிகளில் டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரங்கள் விரிவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனிடையே நோய் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு சிறப்பு முகாம்களும், நிலவேம்பு குடிநீா் விநியோகமும் நடைபெற்று வருகிறது. போதிய அளவிலான மருந்துகளும், மாத்திரைகளும் மாவட்ட மருத்துவமனைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்று அவா்கள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com