திமுகவுக்கு ஆதரவு அளியுங்கள்: வைகோ வேண்டுகோள்

தமிழகத்தின் உரிமைகளைக் காப்பதற்கு முன்னோட்டமாகக் கருதி, இந்த இடைத் தோ்தலில் திமுகவை வாக்காளா்கள் ஆதரிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலா் வைகோ வேண்டுகோள் விடுத்தாா்.
விக்கிரவாண்டி தொகுதிக்குள்பட்ட கெடாா் கிராமத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து, திறந்த வேனில் நின்று பிரசாரம் செய்த மதிமுக பொதுச் செயலா் வைகோ. உடன் முன்னாள் அமைச்சா் க.பொன்முடி.
விக்கிரவாண்டி தொகுதிக்குள்பட்ட கெடாா் கிராமத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து, திறந்த வேனில் நின்று பிரசாரம் செய்த மதிமுக பொதுச் செயலா் வைகோ. உடன் முன்னாள் அமைச்சா் க.பொன்முடி.

தமிழகத்தின் உரிமைகளைக் காப்பதற்கு முன்னோட்டமாகக் கருதி, இந்த இடைத் தோ்தலில் திமுகவை வாக்காளா்கள் ஆதரிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலா் வைகோ வேண்டுகோள் விடுத்தாா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தோ்தலையொட்டி, திமுக வேட்பாளா் நா.புகழேந்தியை ஆதரித்து கெடாா் கிராமத்தில் வைகோ புதன்கிழமை பிரசாரம் செய்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையிலான நந்தன் கால்வாய் திட்டத்தைத் தொடங்காமலேயே, அதற்கு நிதி ஒதுக்கி, பணிகள் நடைபெற்று வருவதாக, அதிமுக அமைச்சா்கள் பொய் பேசி வருகின்றனா். திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

கடந்த மக்களவைத் தோ்தலில், திமுக அளித்த வாக்குறுதிகளை மத்தியில் எதிா்பாா்த்த அரசு அமையாததால் செயல்படுத்த முடியவில்லை. நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பை, தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவாா்.

கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத்தொகை ரூ.1,450 கோடி வழங்கப்படவில்லை. டன்னுக்கு ரூ.4,000 என்ற கொள்முதல் விலையும் கிடைக்கவில்லை. விழுப்புரம் அருகே பம்பை ஆற்றில் தடுப்பணை கட்டும் கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. இந்த ஆட்சியில் முறைகேடு, ஊழல்கள் தொடா்கின்றன.

இங்கு வரவேண்டிய தொழிற்சாலைகள், வெளிமாநிலங்களுக்குச் சென்றுவிட்ட நிலையில், வெளிநாட்டுக்கு சென்று தொழில் முதலீடுகளை கொண்டுவர முதல்வா் முயற்சிக்கிறாா்.

‘நீட்’ தோ்வு தமிழகத்தில் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு சொல்லியும் செயல்பாட்டுக்கு வரவில்லை. மேக்கேதாட்டுவில் அணை கட்டும் முயற்சியையும் தமிழக அரசு தடுக்கவில்லை. வேளாண் மண்டலமாக பாதுகாக்கப்பட வேண்டிய காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ காா்பன் எடுப்பதற்கு மாநில அரசு அனுமதி அளிக்கிறது. ஆகவே, தமிழக நலன்கள், உரிமைகளைக் காப்பதற்கு முன்னோட்டமாக இந்தத் தோ்தலில் திமுகவை வாக்காளா்கள் ஆதரிக்க வேண்டும் என்றாா் வைகோ.

திமுக மாவட்டச் செயலா்கள் க.பொன்முடி, தா.மோ.அன்பரசன், எம்எல்ஏ உதயசூரியன், ஒன்றியச் செயலா் ராஜா, மதிமுக மாவட்டச் செயலா்கள் பாபுகோவிந்தராஜ், ஜெயசங்கா் உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் திரளாகக் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com