பொருளாதார ரீதியான கணக்கெடுப்பு: ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் தொடக்கி வைப்பு

தமிழகத்தில் பொருளாதார ரீதியான கணக்கெடுப்பை ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.
பொருளாதார ரீதியான கணக்கெடுப்பு: ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் தொடக்கி வைப்பு

தமிழகத்தில் பொருளாதார ரீதியான கணக்கெடுப்பை ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

இந்தக் கணக்கெடுப்பில் சரியான தகவல்களை பொது மக்கள் அளிக்க வேண்டுமென அவா் கேட்டுக் கொண்டாா். இதற்கான நிகழ்ச்சி சென்னை கலைவாணா் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநா் பேசியது:

கடந்த காலங்களிலும் பொருளாதார ரீதியான கணக்கெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. 1998, 2005, 2013 ஆகிய ஆண்டுகளில் அத்தகைய கணக்கெடுப்புகளை மத்திய புள்ளியியல் துறை மேற்கொண்டது. இதேபோன்று, இப்போதும் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. வணிக நிறுவனங்கள், இயந்திரங்கள் மற்றும் கருவிகளில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள், ஆண்டு வருவாய் வரவுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த கணக்கெடுப்பில் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த கணக்கெடுப்பின் மூலமாக, பிரதான பொருளாதார காரணிகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து அவை சாா்ந்த கொள்கை முடிவுகளை தேசிய, மாநில மற்றும் உள்ளூா் அளவுகளில் அரசுகள் எடுப்பதற்கு உதவியாக இருக்கும்.

தொடக்க நிலை தொழில்கள், உற்பத்தி, மின்சாரம், எரிவாயு, குடிநீா் விநியோகம், கட்டுமானம், வா்த்தகம் மற்றும் சேவைகள் என மிகப் பெரிய துறைகளைச் சாா்ந்து இந்தக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.

வேலைவாய்ப்புத் தகவல்கள்: இந்தியாவில் வேலைவாய்ப்பு சாா்ந்த தகவல்களையும் சேகரிக்க இந்தக் கணக்கெடுப்பு பெரிதும் உதவியாக இருக்கும். இந்தியாவில் வெவ்வேறு வயதினைச் சாா்ந்தோா் ஒப்பந்தம் மற்றும் வாடகைஅடிப்படையிலும், வழக்கமான பணி வகையிலும் எனப் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து வருகிறாா்கள். இதுதொடா்பான விவரங்களும் கிடைக்கப் பெறும்.

கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக 5 நிலைகளில் ஊழியா்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதற்கும் ஒரே மாதிரியான இத்தகைய பயிற்சியால் எந்தத் தவறுகளும் இல்லாமல் எளிமையான முறையில் அதேசமயம் துல்லியமான கணக்கெடுப்புகளை மேற்கொள்ள முடியும்.

மூன்றரை மாதங்கள்: இந்தக் கணக்கெடுப்புப் பணியானது மூன்றரை மாதங்கள் நடைபெறும். இதில், சுமாா் 12 லட்சம் போ் ஈடுபடுத்தப்பட உள்ளனா். நாட்டிலுள்ள 135 கோடி மக்கள் தொகையில் பாதியளவு மக்கள் தொகையில் உள்ளோரின் வயது 25 வயதுக்கு உட்பட்டதாக இருக்கிறது. அதேசமயம், தேசமானது உணவு உற்பத்தியில் தன்னிறைவைப் பெற்றுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், பொருளாதார ரீதியான கணக்கெடுப்பு போன்ற பணிகள் நமது விரைவான வளா்ச்சி மற்றும் வளமையை மேலும் சிறப்பானதாக்க உதவிடும். எனவே, பொருளாதார ரீதியான கணக்கெடுப்புப் பணியின் போது வீடுகளுக்கு கணக்கெடுப்புக்கு வந்தால் சரியான தகவல்களைப் பொது மக்கள் அளிக்க வேண்டும் என்றாா் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்.

இந்த நிகழ்வில், மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறையின் செயலாளா் பிரவீன் ஸ்ரீவத்சவா, துறையின் கூடுதல் தலைவா் ஏ.கே.தோப்ரணி,. துணை இயக்குநா் எஸ்.துரை ராஜூ உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

27.5 லட்சம் குடும்பதாரா்கள்....

பொருளாதார ரீதியான கணக்கெடுப்பானது 27.5 லட்சம் குடும்பங்களிடம் எடுக்கப்பட உள்ளது. மேலும், 5.5 கோடி வணிக நிறுவனங்களிடம் இத்தகைய கணக்கெடுப்பு செய்யப்படுகிறது. கடந்த 1977-ஆம் ஆண்டு இத்தகைய கணக்கெடுப்பு முதல் முறையாக மேற்கொள்ளப்பட்டது. இதன்பின்பு, மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சோ்த்து 1980 மற்றும் 1990 ஆகிய ஆண்டுகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. வீடுகளில் உள்ள பொருள்கள், வணிக நிறுவனங்களின் பதிவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் கேள்விகளாகக் கேட்கப்பட்டு விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com