பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு: போலீஸ் வேனில் சென்ற பத்திரிகையாளர்கள்!

பத்திரிகையாளர்கள் அனைவரும் சென்னை விமான நிலையத்தில் இருந்து போலீஸ் வேனில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 
பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு: போலீஸ் வேனில் சென்ற பத்திரிகையாளர்கள்!

பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் வரலாற்று மிக்க சந்திப்பு இன்று மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, இரு நாட்டுத் தலைவர்களும் சென்னைக்கு வருகை தந்துள்ளனர். முதலில் சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். 

அதைத் தொடர்ந்து பிற்பகல் 1.30 மணிக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு தமிழக அரசு சார்பில் மிகச்சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் என சீன அதிபருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். விமான நிலையத்திலேயே பரதநாட்டியம், மயிலாட்டம், ஒயிலாட்டம் என கலாசார நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 

இந்த நிலையில், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த சந்திப்பிற்காக இந்திய பத்திரிக்கையாளர்கள் மட்டுமில்லாது சர்வதேச அளவில் பத்திரிகையாளர்கள் சென்னையில் குவிந்துள்ளனர். இன்று மாலை இரு நாட்டுத் தலைவர்கள் சந்திப்பினை அடுத்து, பத்திரிகையாளர்கள் அனைவரும் மாமல்லபுரத்தின் அருகே உள்ள ஊடக மையத்திற்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து போலீஸ் வேனில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு கருதி அவர்கள் வேறு வாகனத்தில் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. 

முதல்முறையாக போலீஸ் வேனில் செல்வதாக பெரும்பாலான பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர். மேலும், வாகனத்தின் அளவு மிகவும் சிறிதாக இருந்ததாகவும், அதில் பயணிக்க சற்று சிரமமாக இருந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். 

மோடி- ஜி ஜின்பிங் சந்திப்பையடுத்து, சென்னையில் குறிப்பிட்ட சாலைகளில் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக, பரபரப்பாகக் காணப்படும் கிழக்கு கடற்கரைச் சாலை வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும், அப்பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com