மோடி - ஜின்பிங் சந்திப்பிற்கு மாமல்லபுரத்தை தேர்வு செய்தது ஏன்? சீனர்களுக்கும், தமிழர்களுக்கும் என்ன தொடர்பு?

பிரதமர் நரேந்திர மோடி- சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பிற்கு மாமல்லபுரம் தேர்வு செய்யப்பட்டது ஏன்? மாமல்லபுரத்தைத் தேர்வு செய்தது யார்?
Mamallapuram
Mamallapuram

பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடமான மாமல்லபுரத்தில் சந்திக்க இருக்கின்றனர். இந்தியா முழுவதும் பல்வேறு சிறப்பு வாய்ந்த, பழமையான நகரங்கள் இருக்க, மாமல்லபுரம் தேர்வு செய்யப்பட்டது ஏன்? தேர்வு செய்தது யார்? உள்ளிட்ட தகவல்கள் சுருக்கமாக:

சங்க காலத்தைச் சேர்ந்த பழங்கால நகரமாக மாமல்லபுரம் கருதப்படுகிறது. அப்பகுதியில் இருந்து கிடைத்துள்ள ஆதாரங்கள் பலவும் இதனை நமக்குப் பறைசாற்றுகின்றன. 

பழங்காலத்தில் இருந்தே சீனாவுக்கும், தமிழ்நாட்டுக்குமான வணிகத் தொடர்புகள் இருந்துள்ளன. 

பல்லவர்கள் சீனா, எகிப்து, ரோம் உள்ளிட்ட நாடுகளுடன் வணிகம் செய்ததற்கான ஆதாரங்கள் மாமல்லபுரத்தில் இருக்கின்றன. மாமல்லபுரத்தில் வெவ்வேறு வடிவங்களில் உள்ள நான்கு சிங்கங்களின் சிற்பங்கள், பல்லவர்கள், சீனா, எகிப்து, ரோம் உள்ளிட்ட நாடுகளைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது. 

அதேபோன்று பல்லவர்கள் காலத்திற்குப் பின்னரும் சோழப் பேரரசுக்கும், சீனாவுக்கும் இடையே வணிகத் தொடர்பு இருந்ததாக சான்றுகள் உள்ளன. 

முதலாம் நூற்றாண்டில் இருந்தே சீனாவில் இருந்து பலர் ஆராய்ச்சிக்காக இந்தியாவுக்கு வந்துள்ளதை வரலாற்று நூல்கள் உறுதிப்படுத்துகின்றன.

முற்காலத்தில் சீனா, திபெத் பகுதியை கைப்பற்ற பல்லவர்கள் சீனாவுக்கு உதவியதாகவும் இதனால் பல்லவர்களும், சீனர்களுக்கும் இடையே ஒரு நட்புறவு இருந்ததாகவும் ஆதாரங்கள் உள்ளன. 

கி.பி. 6ம் நூற்றாண்டில் யுவான் சுவாங் என்ற சீனப்பயணி இந்தியாவுக்கு வந்ததாக நாம் வரலாற்றுப் புத்தகத்தில் படித்திருப்போம். இவர் காஞ்சிபுரம் மற்றும் மாமல்லபுரத்திற்கும் வருகை தந்துள்ளார். இவர் காஞ்சி நகருக்கு வந்து சென்றதன் அடையாளமாக கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள மண்டபம் ஒன்றில் யுவன் சுவாங்கின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. 

காஞ்சிபுரத்தின் பட்டுத் தொழில் நுட்பம் சீனாவுக்கு பரவ முதல் காரணமாக இருந்தவர் என்றும் யுவான் சுவாங்கைக் கூறலாம்.

ஆனால், யுவான் சுவாங்கிற்கு முன்னதாகவே, முதலாம் நூற்றாண்டிலேயே சீனர்கள் இருவர் கடல் வழியாக காஞ்சி நகரத்துக்கு வந்துள்ளனர். அதுமுதலே இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே வணிகத் தொடர்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

இதுபோன்று சீனப்பயணிகள் பலர் இந்தியாவிற்கு வருகை தந்து தமிழ் நூல்கள், தமிழர்களின் பல்வேறு கலைகள் குறித்து ஆய்வு செய்துள்ளனர். தற்போதும் காஞ்சி நகருக்கும், மாமல்லபுரத்திற்கும் சீனர்களின் வருகை அதிகம் இருப்பதை நாம் காண முடியும். 

தமிழ் வரலாற்று அறிஞர்கள், தமிழ் புலவர்கள் மற்றும் தமிழர்களின் சிறப்புகளை சீன வரலாற்று அறிஞர்கள் பலர் தங்களது நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். 

தமிழகத்தில் இருந்து போதி தர்மர் சீனாவுக்குச் சென்று தற்காப்பு கலைகளை பரப்பி அங்கேயே துறவியாக வாழ்ந்தார். 

1956ம் ஆண்டு மத்தியில் பிரதமர் நேரு தலைமையிலான ஆட்சியின் போது சீனாவின் பிரதமராக இருந்த சூ என்லாய், மாமல்லபுரத்திற்கு வருகை தந்தார். இவர் சீனாவின் வெளியுறவுத் துறையின் அமைச்சராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மாமல்லபுரத்திற்கு வருகை தந்த சூ என்லாய் காஞ்சிப் பகுதி மக்களுடன் நீண்ட நேரம் உரையாடியுள்ளார்.  

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவுக்கு பயணம் செய்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபரைச் சந்தித்தார். அங்குள்ள பழமையான இடமான  வுஹானில் இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்துப் பேசினர். அப்போது இந்தியாவுக்கு வருகை தர வேண்டும் என்று சீன அதிபருக்கு மோடி அழைப்பு விடுத்தார். 

இந்த அழைப்பை ஏற்று சீன அதிபர்  ஜி ஜின்பிங் இன்று தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார். முதலில் இந்த சந்திப்புக்க்கான இடமாக மாமல்லபுரத்தை தேர்வு செய்தது மத்திய அரசு என்று தகவல்கள் வெளியாகின.

ஆனால், மாமல்லபுரத்தை தேர்வு செய்தது சீனா தான் என்று சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவுக்கான முன்னாள் சீனத் தூதரான  லுவா ஸாகுவி என்பவர் தற்போது சீனாவின் துணை வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இவர் தான் இந்தியாவின் பழமையான வரலாற்று சிறப்புமிக்க இடமான மாமல்லபுரத்தைத் தேர்வு செய்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

சீனாவுக்கும் தமிழ்நாட்டுக்குமான பழங்கால வணிகத்தொடர்புகள், ஒற்றுமைகள் குறித்து அறிந்ததாலேயே இவ்விடத்தை தேர்வு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

எனினும், பிரதமர் மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பு தமிழகத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாமல்லபுரத்தில் நடைபெறுவது தமிழர்களின் பெருமைகளை உலகறியச் செய்கிறது. இது தமிழர்களுக்கு கிடைத்த அங்கீகாரமாகவே பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com