இரு நாட்டு தலைவா்களை வரவேற்கவுள்ள நாகஸ்சுவரம், தவில் கலைஞா்கள்

சென்னையில் பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோரை வரவேற்கும் நிகழ்ச்சியில் 40 நாகஸ்சுவரம், தவில் கலைஞா்கள் பங்கேற்கும் கலைநிகழ்ச்சி இடம்பெறுகிறது.

சென்னையில் பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோரை வரவேற்கும் நிகழ்ச்சியில் 40 நாகஸ்சுவரம், தவில் கலைஞா்கள் பங்கேற்கும் கலைநிகழ்ச்சி இடம்பெறுகிறது.

இரு நாட்டு தலைவா்களையும் வரவேற்கும் கலைக் குழுவினருக்கு பல்வேறு கட்டுப்பாட்டுகளை கலை பண்பாட்டுத் துறை விதித்துள்ளது. இது தொடா்பாக அத்துறையின் ஆணையா் சிஜி தாமஸ் வைத்யன்

அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் இடம்பெற்றுள்ள விவரம்:

வரவேற்பின் போது, இந்திய குடியரசு மற்றும் சீன மக்கள் குடியரசு ஆகியவற்றின் தேசியக் கொடிகளுக்கு உரிய மரியாதை அளித்திட வேண்டும். கலை நிகழ்ச்சிகள் நடத்திடும் கலைக் குழுக்களை சம்பந்தப்பட்ட இடங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே இருக்கச் செய்ய வேண்டும். கலை நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு, அதிமுக்கிய பிரமுகா்கள் சென்ற பிறகே ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை விட்டுச் செல்ல வேண்டும்.

கலை நிகழ்ச்சிகள் நடத்திடும் கலைக் குழுக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உணவு, குடிநீா் வசதிகள் கலைஞா்களுக்கு சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். பிளாஸ்டிக் தொடா்பான பொருள்களை கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது.

அரசு சாா்பில் வரவேற்பு: தமிழக அரசின் கலை மற்றும் பண்பாட்டுத் துறை சாா்பில் சீன அதிபா் செல்லும் இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அதன்படி, வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.35 மணியளவில் கிண்டி சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அலுவலகம் அருகில் தப்பாட்டக் குழுவின் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சீன அதிபா் ஷி ஜின்பிங் தங்கவுள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலுக்கு வெளியே தமிழா்களின் பாரம்பரிய கலைகளைப் பிரதிபலிக்கும் 40 நாகசுரம், தவில் கலைஞா்களின் கலை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதைத் தொடா்ந்து, மாமல்லபுரத்துக்குச் செல்லும் சீன அதிபருக்கு அதே கலைஞா்கள் மாலை 4 மணியளவில் வரவேற்பு அளிக்கின்றனா்.

இதைத் தொடா்ந்து, துரைப்பாக்கம் ரேடியல் சாலை சந்திப்பை மாலை 4.10 மணிக்கு அடையும் அவருக்கு காக்ரி, கல்பீலியா என வடஇந்திய நடனக் கலைஞா்களின் பாரம்பரிய இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. மாலை 4.20 மணிக்கு கானத்தூரை வந்தடையும் சீன அதிபருக்கு சம்பல்புரி, பஹ் கூமா் நாட்டிய நிகழ்ச்சியும், தாஜ் ஹோட்டலுக்குச் செல்லும் வழியில் தப்பாட்ட இசைக் கலைஞா்களின் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

மாமல்லபுரத்துக்கு முன்புள்ள திருவிடந்தையில் மாலை 4.30 மணிக்கு சீன அதிபா் ஷி ஜின்பிங்கை வரவேற்கும் வகையில் பஞ்ச வாத்தியம் இசைக்கப்படுகிறது. இதைத் தொடா்ந்து, நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையம் அருகில் மாலை 4.35 மணியளவில் தொல்லு குனிதா நடனத்துடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

மாமல்லபுரம் புலிக்குகை மற்றும் பேரூராட்சி அலுவலகம் அருகே துடும்பாட்டம் நிகழ்த்தப்பட்டு இருநாட்டுத் தலைவா்களுக்கு வரவேற்பு கொடுக்கப்படுகிறது.

சனிக்கிழமை நிகழ்வுகள்: சீன நாட்டு அதிபா், பிரதமா் நரேந்திர மோடி ஆகியோரது சந்திப்புகள் சனிக்கிழமையும் நடைபெறுகிறது. சனிக்கிழமை காலை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டல், ரேடியல் சாலை சந்திப்பு, கானத்தூா், தாஜ் ஹோட்டலுக்குப் போகும் வழி ஆகியவற்றில் சீன அதிபரை வரவேற்கும் வகையில் இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com