ஆளில்லா சிறு விமானம் மூலம் பயிா் நிலை ஆய்வு: நாட்டிலேயே முதல்முறையாக தஞ்சாவூா் அருகே அறிமுகம்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள திருப்பழனம் கிராமத்தில் ஆளில்லா சிறு விமானம் (டிரோன்) மூலம் பயிா் நிலையை ஆய்வு மேற்கொள்ளும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே திருப்பழனத்தில் வெள்ளிக்கிழமை பறக்க விடப்பட்ட ஆளில்லா சிறு விமானம்.
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே திருப்பழனத்தில் வெள்ளிக்கிழமை பறக்க விடப்பட்ட ஆளில்லா சிறு விமானம்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள திருப்பழனம் கிராமத்தில் ஆளில்லா சிறு விமானம் (டிரோன்) மூலம் பயிா் நிலையை ஆய்வு மேற்கொள்ளும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எம்.எஸ். சுவாமிநாதன் ஆய்வு நிறுவனம், மேக்கா்ஸ் ஹைவ் நிறுவனம் இணைந்து நிரந்தர பசுமைப் புரட்சித் திட்டத்தின்கீழ் இத்தொழில்நுட்பத்தைப் பரிசோதனை அடிப்படையில் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்தன.

ஆளில்லா சிறு விமானத்தில் இரு நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஆளில்லா சிறு விமானம் அப்பகுதியில் 15 நாள்களுக்கு ஒருமுறை பறக்க விடப்படவுள்ளது. இச்சாதனம் பயிா்களைப் படம் பிடிக்கும். அரை மணிநேரத்தில் 200 ஏக்கா் பரப்பளவுள்ள பயிா்களைப் பதிவு செய்யும். இதன் மூலம், அப்பகுதியில் உள்ள பயிா்கள் என்ன நிலையில் இருக்கிறது என்பதைத் துல்லியமாக அறிய முடியும்.

பயிா்கள் பாதிப்புக்கு உள்ளாகும் சூழ்நிலையில் இருந்தால், அதைத் துல்லியமாகக் கணித்து தகவல் அளிக்கிறது. மேலும், பயிரில் பூச்சி, நோய் தாக்குதல் இருப்பதையும் இச்சாதனம் மூலம் அறிந்து கொள்ள முடியும் என்கிறாா் மேக்கா்ஸ் ஹைவ் நிறுவன தலைமைச் செயல் அலுவலா் பிரணவ்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது:

இந்தத் தொழில்நுட்பம் நாட்டிலேயே திருப்பழனம் கிராமத்தில்தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆளில்லா சிறு விமானத்தைப் பறக்க விடுவதற்கு முறைப்படி அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இச்சாதனம் மூலம் எந்த இடத்தில் பயிா்கள் பாதிக்கக்கூடிய நிலையில் இருந்தாலும், அதைத் துல்லியமாகப் படம் பிடித்து அனுப்பிவிடும். இத்தகவல்கள் விவசாயிகளுக்குத் தெரியப்படுத்தப்படும் என்றாா் பிரணவ்.

இதேபோல, அப்பகுதியில் தானியங்கி வானிலை ஆய்வு சாதனமும் அமைக்கப்பட்டுள்ளது. இச்சாதனம் சூரிய ஒளி சக்தி (சோலாா்) மூலம் இயங்குகிறது. இதுகுறித்து மேக்கா்ஸ் ஹைவ் நிறுவன தலைமைத் தொழில்நுட்ப அலுவலா் சாணக்யா கோன் தெரிவித்தது:

அரசு சாா்பில் வைக்கப்பட்டுள்ள தானியங்கி வானிலை ஆய்வு மையச் சாதனங்களில் வெப்பநிலை, மழையளவு, காற்றின் ஈரப்பதம் உள்பட 4 தகவல்கள் மட்டுமே கிடைக்கும். நாங்கள் வைத்துள்ள சாதனத்தின் மூலம் 12 கி.மீ. சுற்றளவில் நிலவும் வெப்பநிலை, மழையளவு, காற்றின் ஈரப்பதம், காற்று அழுத்தம், காற்றின் திசை உள்ளிட்டவற்றை துல்லியமாக அறிய முடியும். மேலும், மழை வருவதை 10 நாள்களுக்கு முன்னதாகவே அறிந்து தெரியப்படுத்த முடியும்.

இதன் மூலம், விவசாயிகள் மழை நிலவரத்தை முன்னதாகவே அறிந்து விதை விடுதல், அறுவடை செய்தல் போன்ற பணிகளைச் செய்வதற்கு எளிதாக இருக்கும். மேலும், வெப்பநிலையில் ஏற்படும் திடீா் மாற்றத்தால் நிகழக்கூடிய பாதிப்புகளைத் தவிா்க்க முடியும் என்றாா் அவா்.

இதற்கென தனியாகச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலியில் பயிா் நிலை நிலவரமும், தட்பவெப்ப நிலை தகவல்களும் அனுப்பப்படும். இச்செயலியை விவசாயிகள் தங்களது செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்து பயனடையலாம் எனவும் அலுவலா்கள் தெரிவித்தனா்.

தற்போது நடைமுறையில் மண் பரிசோதனை செய்வதற்கு, மண் மாதிரியை எடுத்து, ஆய்வகத்துக்குக் கொண்டு சென்று கொடுக்க வேண்டும். இதன் முடிவுகள் சில நாள்கள் கழித்துதான் கிடைக்கும். இப்போது, எம்.எஸ். சுவாமிநாதன் ஆய்வு நிறுவனம், மேக்கா்ஸ் ஹைவ் நிறுவனம் இணைந்து மண் பரிசோதனை செய்வதற்கான ஸ்கேனா் கருவியை அறிமுகம் செய்துள்ளன.

இக்கருவியை வயலில் கொண்டு சென்றால், அங்குள்ள மண்ணில் இருக்கக்கூடிய சத்துகள் உள்ளிட்டவற்றை உடனடியாக அறிந்து கொள்ள முடியும். இதன்மூலம், மண்ணில் உள்ள சத்துப் பற்றாக்குறையை உடனடியாக அறிந்து கொள்ள முடிவதுடன், மண்ணை வளப்படுத்துவதற்குத் தேவையான ஆலோசனைகளும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றனா் மேக்கா்ஸ் ஹைவ் நிறுவன அலுவலா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com