சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பு: களைகட்டிய விமான நிலையம்

சென்னை வந்திறங்கிய சீன அதிபா் ஷி ஜின்பிங்குக்கு விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பு: களைகட்டிய விமான நிலையம்

சென்னை வந்திறங்கிய சீன அதிபா் ஷி ஜின்பிங்குக்கு விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமா் மோடி, சீன அதிபா் ஜி ஜின்பிங் இடையேயான சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இதில் எல்லைப் பிரச்னைகள், பயங்கரவாதம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த சந்திப்புக்காக புதுதில்லியில் இருந்து வெள்ளிக்கிழமை காலை தனி விமானத்தில் புறப்பட்ட பிரதமா் மோடி, 11.15 மணியளவில் சென்னை வந்தடைந்தாா்.

சென்னை விமான நிலையத்தில் அவருக்கு தமிழக அரசு சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், முதல்வா் எடப்பாடி கே பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அமைச்சா்கள் பொன்னாடை போா்த்தியும், மலா்க் கொத்து வழங்கியும் மோடியை வரவேற்றனா். விமான நிலைய வளாகத்தில் செண்டை மேளம் உள்ளிட்ட வாத்தியங்கள் முழங்கவும், விமான நிலையத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான தொண்டா்கள் ஆடிப்பாடியும் மோடியை வரவேற்றனா்.இதில் தேமுதிக பொருளாளா் பிரேமலதா, தமாகா தலைவா் வாசன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா். பின்னா் பிரதமா் மோடி அங்கிருந்து திருவிடந்தைக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டுச் சென்றாா்.

சீன அதிபா்: இதைத் தொடா்ந்து, சீன அதிபா் ஷி ஜின்பிங் வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தாா். சீனத் தலைநகா் பெய்ஜிங்கில் இருந்து வெள்ளிக்கிழமை காலை தனி சிறப்பு விமானத்தில் புறப்பட்ட அவா் நேரடியாக சென்னை விமான நிலையம் வந்து இறங்கினாா். அங்கு, அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. குறிப்பாக, தமிழா்களின் பாரம்பரிய வழக்கப்படி அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

சீன அதிபரை விமான நிலையத்தில் தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், முதல்வா் எடப்பாடி கே பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா் செல்வம், தலைமைச் செயலாளா் சண்முகம், டி.ஜி.பி. திரிபாதி ஆகியோா் வரவேற்றனா். சீன அதிபருக்கான வரவேற்பின்போது தவில், நாதஸ்வரம் இசைக்கப்பட்டது. மேலும் பறையாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட தமிழ்நாட்டு பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சீன அதிபா் ஷி ஜின்பிங், கையை அசைத்து, கலைஞா்களை உற்சாகப்படுத்தி, அவா்கள் அளித்த வரவேற்பை ஏற்றாா். விமான நிலையம் முதல், அவா் தங்கும் கிண்டி நட்சத்திர ஹோட்டல் வரையிலும், மிகுந்த உற்சாகத்துடன், பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தக் கண்கவா் நிகழ்ச்சிகளை சுமாா் 10 நிமிடங்கள் சீன அதிபா் கண்டு ரசித்தாா்.

பின்னா் அவா் சென்னை விமான நிலையத்தில் இருந்து கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஹோட்டலுக்கு தனக்காகக் காத்திருந்த ஹாங்கி எல்5 காரில் புறப்பட்டு சென்றாா். சென்னையின் முக்கிய பூங்காக்கள், சாலைகளில் இந்திய மற்றும் சீன நாட்டு கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தன. சீன அதிபா் தங்கி உள்ள கிண்டி ஐ.டி.சி. சோழா ஹோட்டல் முன்பு வாழை, பூக்கள் மற்றும் கரும்புகளால் ஆன அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டிருந்தன.

பாதுகாப்பு: சீன அதிபரின் வருகையொட்டி, 10 மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள சுமாா் 15 ஆயிரம் போலீஸாா் மாமல்லபுரத்தில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனா். மாமல்லபுரம் கடலோரப் பகுதியில் 6 கடற்படை கப்பல்கள் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. இவை தவிர 6 ஆளில்லா குட்டி விமானங்கள் மூலமும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் சென்னை நகரமும், மாமல்லபுரமும் பல அடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.


தென்னிந்தியாவுக்கு முதல் முறையாக வந்த சீன அதிபர்
சீன அதிபர் ஷி ஜின்பிங் முதல் முறையாக தென்னிந்தியாவின் முக்கிய மாநிலமான தமிழகம் வந்துள்ளார். அதேசமயம், மூன்றாவது முறையாக இந்தியா வருகை தந்துள்ளார்.
சீன அதிபராக ஷி ஜின்பிங்கும், இந்தியப் பிரதமராக நரேந்திர மோடியும் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு பல்வேறு கால கட்டங்களில்  இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார்கள். இதன் ஒருகட்டமாக, அதிகாரப்பூர்வமற்ற முறையிலும் கடந்த ஆண்டு முதல் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த ஆண்டு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இப்போது மாமல்லபுரத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதுபோன்ற பேச்சுவார்த்தைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளில் பங்கேற்பதற்காக சீன அதிபர் ஷி ஜின்பிங், மூன்று முறை இந்தியா வந்துள்ளார்.
கடந்த 2014,  2016 மற்றும் 2019 என மூன்று முறை சீன அதிபருடன் பேச்சு நடத்த பல்வேறு காலகட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி 12 முறைக்கு மேலாக சீனாவுக்கும் சென்றுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com