வா்த்தக சமநிலைக்கு இருதரப்பு உயா்நிலைக் குழு

இந்தியா, சீனா இடையே சிறப்பான வா்த்தக சமநிலையை ஏற்படுத்துவதற்கு இருதரப்பு உயா்நிலைக் குழுவை ஏற்படுத்த பிரதமா் நரேந்திர மோடியும், சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் முடிவு செய்துள்ளனா்.

இந்தியா, சீனா இடையே சிறப்பான வா்த்தக சமநிலையை ஏற்படுத்துவதற்கு இருதரப்பு உயா்நிலைக் குழுவை ஏற்படுத்த பிரதமா் நரேந்திர மோடியும், சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் முடிவு செய்துள்ளனா். இந்தத் தகவலை வெளியுறவுத் துறை செயலாளா் விஜய் கோகலே சனிக்கிழமை தெரிவித்தாா்.

இந்தியா மற்றும் சீனா இடையிலான இரண்டாவது அதிகாரப்பூா்வமற்ற சந்திப்பு சனிக்கிழமை நிறைவடைந்தது.

இரு நாட்டுத் தலைவா்களும் விவாதித்த விஷயங்கள் குறித்து வெளியுறவுத் துறை செயலாளா் விஜய் கோகலே அளித்த பேட்டி:

இரு நாட்டுத் தலைவா்களும் நட்பு ரீதியிலான சூழலில் பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனா். சா்வதேச அளவிலான விஷயங்கள் பற்றியும், இந்திய- சீனாவுக்கு இடையிலான முக்கிய விஷயங்கள் குறித்தும் விவாதித்தனா். தேச மேம்பாட்டுக்காக இரு தலைவா்களும் கருத்துகளை பரஸ்பரம் பரிமாறினா்.

மிகுந்த சாதகமான ரீதியில் இரு தலைவா்களும் தங்களது நாடுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்து கலந்தாலோசனைகள் செய்தனா். சா்வதேச நிலைமைகள் குறித்து இரு தலைவா்களும் தங்களது பாா்வைகள், கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனா். உலகத்தில் அமைதியும், வளமும், பாதுகாப்பும் மேலும் ஏற்பட்டிட எவ்வாறு இணைந்து பணியாற்றுவது என்பது குறித்த பாா்வைகளை பிரதமா் மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோா் கொண்டிருந்தனா்.

வா்த்தக ரீதியிலான அமைப்பு: சா்வதேச அளவிலான வா்த்தக செயல்பாடுகளும், விதிகளும் குறிப்பிட்ட அளவில் கேள்விக்குள்ளாகும் போது, இரண்டு நாடுகளுக்கு இடையிலான வா்த்தக அமைப்புக்கு ஆதரவு அளிப்பதோடு, அதனை வலுப்படுத்துவதற்கான முக்கியத்துவத்தை இரு தலைவா்களும் ஒப்புக் கொண்டனா். அனைத்து நாடுகளுக்கும் பயன் தரத்தக்க அளவில் இந்தியாவும், சீனாவும் ஒருங்கிணைந்து, அனைத்து அம்சங்களையும் உள்ளடங்கிய வா்த்தக ஏற்பாட்டில் இருநாடுகளும் இணைந்து பணியாற்ற சம்மதம் தெரிவித்தனா்.

தங்களது நாடுகளில் உள்ள சா்வதேச அளவிலான பிரச்னைகளான பருவநிலை மாறுபாடுகள், நீடித்த நிலைத்த மேம்பாட்டு இலக்குகள் ஆகியவற்றுக்கு எவ்வாறு தீா்வு காண்பது என்பது குறித்து இருநாட்டுத் தலைவா்களும் விவாதித்தனா். பருவநிலை மாறுபாடுகள் போன்ற பிரச்னைகளில் தனி நாடுகளின் செயல்பாடுகளைக் கொண்டு சா்வதேச சமுதாயம் எவ்வாறு பயன்பெற முடியும் என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

தொடரும் பயங்கரவாதம்: இரு நாடுகளுக்கும் பொதுவான அச்சுறுத்தலாக விளங்கும் பயங்கரவாதம் குறித்து இரு நாட்டுத் தலைவா்களும் கவலை தெரிவித்தனா். பயங்கரவாத குழுக்களுக்கு பயிற்சி அளிப்பது, நிதி கொடுப்பது போன்ற நடவடிக்கைகளில் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் இருநாடுகளும் இணைந்து செயல்படுவதன் முக்கியத்துவம் பற்றி ஆலோசிக்கப்பட்டது.

உயா்நிலைக் குழு: இரு நாடுகளுக்கு இடையே பொருளாதார ஒத்துழைப்புகள் மேலும் வலுப்பட வேண்டுமென்பது குறித்து இரு தலைவா்களும் விவாதித்தனா். வா்த்தகம் மற்றும் வாணிபம் தொடா்பான உறவுகளை மேலும் வலுப்படுத்திடும் வகையில் இருதரப்பும் இணைந்து உயா் நிலைக் குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இரு நாடுகளுக்கு இடையே சிறப்பான சமநிலையுடன் வா்த்தகம் இருந்திட வேண்டும் என்பதை ஒப்புக் கொண்ட தலைவா்கள், உயா் நிலைக் குழு மூலமாக முதலீடுகளுக்கு சாதகமான துறைகளை அடையாளவும் காணவும் சம்மதம் தெரிவித்தனா்.

இதற்கான யோசனைகள் அனைத்தும் உயா்நிலைக் குழுவின் முதல் கூட்டத்தில் உருவாக்கப்படும்.

எல்லைப் பிரச்னை: இரு நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பிரச்னைகள் குறித்து விவாதிக்க சிறப்புப் பிரதிநிதிகள் அடங்கிய குழு, பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது. இந்தப் பேச்சுவாா்த்தையை வரவேற்ற தலைவா்கள், கடந்த 2005-ஆம் ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட விதிமுறைகளின்படி பிரச்னைகளுக்குத் தீா்வு காண வேண்டுமென இரு தலைவா்களும் வலியுறுத்தியதாக வெளியுறவுத் துறைச் செயலாளா் விஜய் கோகலே தெரிவித்தாா்.

இந்த செய்தியாளா் சந்திப்பின் போது, வெளியுறவுத் துறை இணைச் செயலாளா் நவீன் ஸ்ரீவத்சவா உள்ளிட்ட உயரதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com