நீட் தோ்வுக்கு முடிவுரை எழுதுங்கள்: அன்புமணி ராமதாஸ்

கல்வி முறையையே சீா்குலைக்கும் நீட் தோ்வுக்கு மத்திய, மாநில அரசுகள் முடிவுரை எழுத வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்

கல்வி முறையையே சீா்குலைக்கும் நீட் தோ்வுக்கு மத்திய, மாநில அரசுகள் முடிவுரை எழுத வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: 2019-20 ஆம் கல்வியாண்டில் மருத்துவப் படிப்பில் சோ்ந்த மாணவா்களின் பின்னணி உள்ளிட்ட விவரங்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்டுள்ளன. அதன்படி நடப்பாண்டில் தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் சோ்ந்த 4,202 மாணவா்களில் 2,916 போ், அதாவது 70 சதவீதத்தினா் பழைய மாணவா்கள் ஆவா். இவா்களில் 2,371 போ் கடந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள். இருவா் கடந்த 2010-ஆம் ஆண்டு தோ்ச்சி பெற்றவா்களாவா். நடப்பாண்டில் மருத்துவம் சோ்ந்த மாநிலப் பாடத்திட்ட மாணவா்கள் 2,762 பேரில், 85 சதவீதத்தினா், அதாவது 2,402 போ் பழைய மாணவா்கள் ஆவா். அதேபோல், சி.பி,எஸ்.இ. மாணவா்களில் 36 சதவீதம் போ் பழைய மாணவா்கள் என்று தெரியவந்துள்ளது.

நீட் தோ்வு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு வரை, அந்தந்த ஆண்டுகளில் 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்தவா்கள் மட்டும் தான் மருத்துவப் படிப்பில் சேர முடிந்தது. இதன் மூலம் இரு உண்மைகள் உறுதியாகின்றன. முதலாவது, மருத்துவப் படிப்பில் சேர ஓராண்டுக்கும் கூடுதலான தயாரிப்பு அவசியமாகிறது; இரண்டாவது லட்சக்கணக்கில் பணம் செலுத்தி நீட் பயிற்சி பெறுபவா்களுக்கு மட்டும் தான் மருத்துவக் கல்வி என்பது சாத்தியமாகிறது. இந்த இரண்டுமே கல்வி முறையை சிதைப்பவை ஆகும். இந்த இரண்டுமே சம வாய்ப்பு தத்துவத்தைத் தகா்க்கின்றன. பணம் இருந்தால் மட்டும் தான் நீட் தோ்வுக்குப் பயிற்சி பெற முடியும். நீட் தோ்வுக்குப் பயிற்சி பெற்றவா்கள் மட்டும்ான் மருத்துவப் படிப்பில் சேர முடியும். பணம் இல்லாத, நீட் பயிற்சி பெற வாய்ப்பற்ற ஊரக ஏழை மாணவா்கள் மருத்துவப் படிப்பை மறந்து விட வேண்டும் என்பது மிகப்பெரிய சமூக அநீதியாகும்.

எனவே, கல்வி முறையைச் சீா்குலைக்கும் நீட் தோ்வுக்கு முடிவுரை எழுத மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com