சிவகிரி அருகே பதற்றம்: 10 நிமிட தாக்குதலில் சிதைக்கப்பட்ட பழமையான சாமி சிலைகள்!

சிவகிரி அருகேயுள்ள தொப்பபாளையம் பகுதியில் நள்ளிரவில் பெரிய சுத்தியல் போன்ற ஆயுதங்களுடன் கோவிலுக்குள் புகுந்து 7 மர்மநபர்கள்
சிவகிரி அருகே பதற்றம்: 10 நிமிட தாக்குதலில் சிதைக்கப்பட்ட பழமையான சாமி சிலைகள்!


மொடக்குறிச்சி: சிவகிரி அருகேயுள்ள தொப்பபாளையம் பகுதியில் நள்ளிரவில் பெரிய சுத்தியல் போன்ற ஆயுதங்களுடன் கோவிலுக்குள் புகுந்து 7 மர்மநபர்கள் 10 நிமிடங்களில் 2 சாமி சிலைகளை சுக்குநூறாக அடித்து உடைத்துவிட்டு தப்பிச்சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  

சிவகிரி அடுத்த தொப்பபாளையத்தில் காளியண்ணன் சுவாமி கோவில் உள்ளது. இங்கு இன்று திங்கள்கிழமை அதிகாலை 3 மணியளவில் ஹெல்மெட் மற்றும் முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத 7-மர்மநபர்கள் கோவில் பாதுகாப்புக்கு வைத்திருந்த இரும்பு கேட்டின் பூட்டை கடைப்பாறையால் நெம்பி உடைத்து உள்ளே புகுந்து சுமார் 5 அடி உயரமுள்ள காளியண்ணன் சிலைகளை சம்மட்டியால் அடித்து கீழே தள்ளி 10 நிமிடங்களில் உடைத்து நொறுக்கினர்.  மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவையும் உடைத்து சேதப்படுத்திவிட்டு இருசக்கர வாகனத்தில்  தப்பி சென்றனர். சாமிசிலைகள் உடைத்து நொறுக்கப்பட்ட சம்பவம் காட்டுதீயாக பரவியதால் கோவில் குடிபாட்டு மக்கள் ஏராளமானோர் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  இச்சம்பவம் எதிரொலியாக சிவகிரி சந்தைமேடு அம்மன்கோவில் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டது.

நூற்றுக்கும் மேற்பட்ட  போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.சக்திகணேஷ் மாவட்ட துணைகாவல் கண்காணிப்பாளர் ராஜ் கோட்டாட்சியர் முருகேசன் வருவாய் கோட்ட அலுவலர் கவிதா ஆகியோர் விரைந்து வந்து உடைக்கப்பட சாமிசிலைகளை நேரில் பார்வையிட்டனர். போலீஸ் மோப்பநாய் வீரா வரவழைக்கப்பட்டது. 

அப்போது அங்கு திரண்டிருந்தவர்கள் கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்து சாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்தியவர்களை கைது செய்யக்கோரி கொ.ம.தே.க. மாநில இளைஞரணிசெயலாளர் சூரியமூர்த்தி தலைமையில் அம்மன்கோவில் பகுதியில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

சிலைகளை உடைத்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் உறுதியளித்ததை தொடர்ந்து சாலைமறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. 

சாமிசிலைகளை உடைத்த மர்மநபர்கள் கோவிலில் நுழைந்த முதல் சிலைகளை உடைத்துவிட்டு வெளியேறுவது வரை அனைத்துக் காட்சிகளும் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளதால் குற்றவாளிகளை விரைவில் பிடிபடவாய்ப்புள்ளதாக போலீஸ்தரப்பில் கூறப்பட்டது. மர்ம நபர்கள் அனைவரும் முகமூடி அணிந்திருப்பதால், அடையாளங்களைக் கண்டறிவதில் சற்று சுணக்கம் ஏற்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

இச்சம்பவம் சிவகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிலை உடைக்கப்பட்ட இந்தக் கோயிலின் அறங்காவலர் குழு தலைவராக, ஈரோடு தொகுதியின் முன்னாள் எம்.பி செல்வக்குமார் சின்னையன்தான் இருக்கிறார்.

எந்த அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாதென, கோவில் மற்றும் கிராமத்தைச் சுற்றி 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து தொப்பபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது: இத்தனை ஆண்டுகளாகக் கூரைகுல காளியண்ணன் மற்றும் விளையன்குல காளியண்ணன் சாமிக்கு இரண்டு கற்களை மட்டுமே வைத்து வழிபட்டுவந்தோம். கடந்த மாதம் தான் கற்களுக்குப் பதிலாக சிலைகளை அமைத்து வழிபட்டு வந்தோம். அவற்றைத்தான் இப்போது உடைத்திருக்கிறார்கள். இந்தக் கோவிலில் எங்களுக்கும் உரிமை இருக்கிறது என இன்னொரு தரப்பினர், கடந்த மாதம் பிரச்னை செய்தனர். ஒருவேளை அவர்கள் இந்தச் சிலைகளை உடைத்திருக்க வாய்ப்பிருக்கிறது” என வேதனையோடு தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com