தீபாவளி பட்டாசு கடைகள்: விதிமுறைகளை மீறினால் உரிமம் ரத்து: தீயணைப்புத்துறை எச்சரிக்கை

தீபாவளி பட்டாசு கடைகள் வெடிப்பொருள் சட்டத்தின் விதிமுறைகளை மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும் என தீயணைப்புத்
தீபாவளி பட்டாசு கடைகள்: விதிமுறைகளை மீறினால் உரிமம் ரத்து: தீயணைப்புத்துறை எச்சரிக்கை


தீபாவளி பட்டாசு கடைகள் வெடிப்பொருள் சட்டத்தின் விதிமுறைகளை மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும் என தீயணைப்புத் துறை எச்சரித்துள்ளது.
 தீபாவளி பண்டிகை அக்டோபர் 27-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி தீபாவளி வியாபாரம் விறு,விறுப்பு அடையத் தொடங்கியுள்ளது. 
தீபாவளிக்காக பட்டாசு கடைகளும் ஆங்காங்கு தற்காலிகமாக திறக்கப்படுகின்றன. பட்டாசுகளினால் ஏற்படும் தீ விபத்துகளைத் தடுக்கும் வகையில், தற்காலிக பட்டாசு கடைகள் வைப்பதற்குரிய விதிமுறைகளைக் கடுமையாக தீயணைப்புத்துறை இந்தாண்டு அமல்படுத்தி வருகிறது. 
 முன்னதாக ஒரு மாதத்துக்கு முன்பே  பட்டாசு கடைகளை ஒழுங்குபடுத்துவற்காக தீயணைப்புத் துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து மாநிலம் முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. 
அதில் பட்டாசு கடைகள் வைப்பதற்கு பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்,  அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றை நேரடியாக ஆய்வு செய்த பின்னரே தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
  இதன் அடிப்படையிலேயே தற்காலிக பட்டாசு கடைகள் அமைப்பதற்கு காவல்துறை, உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை ஆகியவற்றின் சார்பில் உரிமம் வழங்கப்பட்டது. தற்போது வியாபாரிகள் இந்த உரிமத்தைப் பயன்படுத்தி கடைகளை அமைத்து வருகின்றனர். 

என்னென்ன விதிமுறைகள்?:  முக்கியமாக,  2008- ஆம் ஆண்டு வெடிப்பொருள் சட்டப்படி பட்டாசு கடை வைக்கும் இடம் கான்கிரீட் கட்டடமாக இருக்க வேண்டும்.  கடையின் இரு புறங்களிலும் வழி கட்டாயம் இருக்க வேண்டும்.  கட்டடத்தில் மின் விளக்குகளை மட்டும் பயன்படுத்த வேண்டும், எண்ணெய் விளக்குகளைப் பயன்படுத்தக்கூடாது.  தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் கேட்பவர்கள் தீயணைப்புத் துறை, உள்ளாட்சி நிர்வாகம், காவல்துறை ஆகியோரிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.
பட்டாசு கடைகளில் வேறு பொருள்கள் விற்பனை செய்யக் கூடாது, தரைத்தளத்தில் மட்டும் பட்டாசுகளை வைத்திருக்க வேண்டும். பட்டாசு வைத்திருக்கும் அறை 9 சதுர மீட்டருக்கு குறைவானதாக இருக்கக் கூடாது. அதேபோல அந்த அறை 25 சதுர மீட்டருக்கு அதிகமான சுற்றளவிலும் இருக்கக் கூடாது.
  ஒரு பட்டாசு கடைக்கும் மற்றொரு கடைக்கும் குறைந்தபட்சம் 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். உதிரி பட்டாசுகளை கடைகளில் விற்பனை செய்யக்கூடாது. இங்கு புகை பிடிக்கக்கூடாது என்பன உள்ளிட்ட எச்சரிக்கை விளம்பர பலகைகளைப் பட்டாசு கடை முன்பு வைத்திருக்க வேண்டும். அலங்கார மின் விளக்குகளைத் தொங்க விடக்கூடாது. வாடிக்கையாளர்களுக்கு பட்டாசு மற்றும் துப்பாக்கி வெடித்து காட்டக் கூடாது. கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகளவில் சேரவிடக்கூடாது.
உரிமம் பெற்ற கட்டடத்தைத் தவிர வேறு இடங்களில் பட்டாசு இருப்பு வைத்திருக்கக் கூடாது,  அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் பட்டாசு இருப்பு வைக்கக்கூடாது.  பட்டாசு கடையின் அருகே தீயணைப்புத் துறை வாகனம் வரும் அளவுக்கு வழி இருக்க வேண்டும். பட்டாசு கடையில் குறைந்தபட்சம் இரு தீயணைப்பு கருவிகள்,  இரு வாளிகளில் தண்ணீர், மணல் ஆகியவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும். கடை உரிமத்தை தணிக்கையின்போது அலுவலர்களின் பார்வைக்குத் தெரியும்படி வைத்திருக்க வேண்டும்.  இருப்பு,  தணிக்கைப் பதிவேடு முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும் ஆகிய விதிமுறைகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என தீயணைப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
உரிமம் ரத்து:   தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம் கூட இல்லாத நிலையில், தற்காலிக பட்டாசு கடைகள் உரிமம் பெற்றவர்கள் வெடிபொருள் சட்டம் கூறும் விதிமுறைகளைப் பின்பற்றுகின்றனரா என திடீர் ஆய்வு செய்யும்படி தீயணைப்புப் படை வீரர்களுக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதில் விதிமுறை மீறல்களில் ஈடுபட்டிருந்தால் சம்பந்தப்பட்ட கடையின் உரிமத்தை ரத்து செய்து, உரிமம் பெற்றவர் மீது வெடிப் பொருள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் தீயணைப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
 இந்த உத்தரவைத் தொடர்ந்து, தீயணைப்புத் துறையினர் செவ்வாய்க்கிழமை (அக். 22) அந்தந்தப் பகுதிகளில் உள்ள பட்டாசு கடைகளில் திடீர் ஆய்வு செய்வார்கள் என கூறப்படுகிறது.                            
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com