தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை:  தமிழக அரசு அறிவிப்பு

தீபாவளிக்கு மறுநாளான திங்கள்கிழமை (அக். 28) அனைத்து மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை:  தமிழக அரசு அறிவிப்பு


தீபாவளிக்கு மறுநாளான திங்கள்கிழமை (அக். 28) அனைத்து மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் 27-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அரசு அலுவலகங்களுக்கு சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் தீபாவளி பண்டிகைக்கென தனியாக விடுமுறை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான திங்கள்கிழமை தேவைப்படும் பட்சத்தில் உள்ளூர் விடுமுறை விட மாவட்ட கல்வி அதிகாரிகளை பள்ளிக்கல்வித் துறை ஏற்கெனவே கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நிலையில், அரசு ஊழியர்கள் தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதுகுறித்து, தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் சார்பில், தலைமைச் செயலாளர் கே.சண்முகத்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தீப ஒளி திருநாளை மிகவும் சிறப்பாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். 
தமிழகத்தில் தலைமைச் செயலகப் பணியாளர்கள், அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் வரும் 27-ஆம் தேதியன்று தீபாவளியை தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று கொண்டாட வசதியாக, வரும் 28-ஆம் தேதி திங்கள்கிழமை தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டுமென மாநிலத்திலுள்ள அனைத்து சங்கங்களும் தலைமைச் செயலக சங்கத்தை வலியுறுத்தின. இந்த வலியுறுத்தலைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு உத்தரவு: தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் கோரிக்கைகளை மாநில அரசு தீவிரமாக பரிசீலித்தது. இதைத் தொடர்ந்து, விடுமுறைக்கான உத்தரவை பொதுத்துறை முதன்மைச் செயலாளர் பி.செந்தில்குமார் திங்கள்கிழமை வெளியிட்டார். அதன் விவரம்:-
தீபாவளிக்கு அடுத்த நாளான வரும் 28-ஆம் தேதி திங்கள்கிழமையன்று தமிழகம் முழுவதும் உள்ள மாநில அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 9-ஆம் தேதி (சனிக்கிழமை) பணிநாளாக அறிவிக்கப்படுகிறது என்று தனது உத்தரவில் பொதுத் துறை முதன்மைச் செயலாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
மூன்று நாள்கள் விடுமுறை: திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டதால், தீபாவளி பண்டிகைக்கு மூன்று நாள்கள் விடுமுறை கிடைக்கும். சனி, ஞாயிறுடன்  திங்கள்கிழமையும் சேர்த்து மொத்தம் மூன்று நாள்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், சொந்த ஊர்களில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் அரசு ஊழியர்கள், பள்ளி மாணவர்கள் நிம்மதி அடைந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com