நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனியில் பலத்த மழை எச்சரிக்கை 

தென் தமிழகம், அதை யொட்டிய  குமரிக்கடல் பகுதி மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காணப்படும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான
நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனியில் பலத்த மழை எச்சரிக்கை 

தென் தமிழகம், அதை யொட்டிய  குமரிக்கடல் பகுதி மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காணப்படும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக,  நீலகிரி , கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (அக். 22)  மிக பலத்த மழையும் , தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் திங்கள்கிழமை கூறியது: தென் தமிழகம் மற்றும் குமரிக்கடல் ஒட்டிய பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வடதமிழகம் , தெற்கு ஆந்திரத்தை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி  காணப்படுகிறது. அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலைகொண்டுள்ளது. இதன்காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் அடுத்த  இரண்டு நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும். 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழை வரை பெய்யக்கூடும்.  
 எச்சரிக்கை: குறிப்பாக,  நீலகிரி , கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (அக்.22) மிக பலத்த மழையும் , தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்  பலத்த மழையும் பெய்யக்கூடும். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.
சென்னையில்...: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 3 நாள்களுக்கு மிதமான மழை தொடரும் என்றார் அவர்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:  தென்மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல், மாலத்தீவு  மற்றும் தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல்  பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு அடுத்த 3 நாள்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. 
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் வரும் 23-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. தற்போது, அங்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இது வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது. இதன்மூலம், தமிழகத்துக்கு அதிக மழை கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதேநேரத்தில், மத்திய கிழக்கு அரபிக்கடலில் காணப்படும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் வலுவடைந்து, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து, இது வடக்கு, வடகிழக்கு நோக்கி நகர வாய்ப்பு உள்ளது.
குழித்துறையில் 140 மி.மீ.: திங்கள்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் 140 மி.மீ., கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் 120 மி.மீ., கன்னியாகுமரி மாவட்டம் கீழ்கோதையாறு, கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தலா 90 மி.மீ., கன்னியாகுமரி மாவட்டம் சுருளகோடு, குலசேகரபட்டினத்தில் தலா 80 மி.மீ., கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை, கன்னியாகுமரி மாவட்டம் மைலாடி, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, தூத்துக்குடியில் தலா 70 மி.மீ. மழை பதிவானது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com