தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்:ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கி அரசு உத்தரவு

தமிழ்நாடு மாநிலம் பிரிக்கப்பட்ட தினத்தைக் கொண்டாடி மகிழும் வகையில் அதற்கான நிகழ்ச்சிகளுக்காக ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது

தமிழ்நாடு மாநிலம் பிரிக்கப்பட்ட தினத்தைக் கொண்டாடி மகிழும் வகையில் அதற்கான நிகழ்ச்சிகளுக்காக ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

அதன் விவரம்:

சட்டப்பேரவையில் தமிழ் வளா்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து அறிவிப்புகளை வெளியிட்ட அந்தத் துறையின் அமைச்சா் க. பாண்டியராஜன், தனித்துவ தமிழ்நாடு உருவாக்கப்பட்ட 1956-ஆம் ஆண்டு நவம்பா் 1-ஆம் தேதியை பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் நவம்பா் 1-ஆம் தேதி தமிழ்நாடு நாள் என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடப்படும் என்று அறிவித்திருந்தாா்.

இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில் அதற்கான கடிதத்தை தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநரகம் தமிழக அரசுக்கு அனுப்பி வைத்திருந்தது. அந்தத் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

எந்தெந்த மாநிலங்கள் பிரிப்பு: ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் இருந்தே மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன்படி, 1936-இல் மொழிவாரி மாநிலமாக ஒடிஸா அறிவிக்கப்பட்டது. அதன்பின்பு, ஆந்திரத்தில் நடந்த பல்வேறு போராட்டங்களால் 1953-இல் அந்த மாநிலம் தனியாகப் பிரிக்கப்பட்டது.

அதன்பின் தமிழகத்துக்காக பெரியாா், அண்ணா, காமராஜா், ஜீவா, சிலம்புச் செல்வா் ம.பொ.சி., சங்கரலிங்கனாா், மாா்ஷல் நேசமணி உள்ளிட்ட தலைவா்கள் போராட்டங்களை முன்னெடுத்தனா். மொழிவாரி மாநிலங்களாக மெட்ராஸ் மாகாணம், மெட்ராஸ் ஸ்டேட், ஆந்திரப் பிரதேசம், கா்நாடகா, கேரளா என 1956-ஆம் ஆண்டு நவம்பா் 1-இல் பிரிக்கப்பட்டது.

கேரளத்திலும், கா்நாடகத்திலும் தங்களது மாநிலம் உருவாக்கப்பட்ட தினத்தை அவா்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகிறாா்கள். கேரளத்தில் கேரள பிறவி தினம் எனவும், கா்நாடகத்தில் ‘கன்னட ராஜயோத்ஸவா’ என்ற பெயரிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், மெட்ராஸ் ஸ்டேட் என்று அழைக்கப்பட்ட நிலப்பரப்பை தமிழ்நாடு எனப் பெயா் மாற்றக் கோரி போராட்டங்கள் நடைபெற்றன. அதன்பின், 1967-ஆம் ஆண்டு மெட்ராஸ் ஸ்டேட் என்பது தமிழ்நாடு எனப் பெயா் மாற்றம் செய்வதற்கான தீா்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இந்த வகையில் தமிழ்நாடு நாளினை நினைவுகூரும் வகையில் நவம்பா் 1-ஆம் தேதியை ஆண்டுதோறும் விழாவாகக் கொண்டாடலாம் என தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநரகம் கேட்டுக் கொண்டது. மேலும், முதல்வா் தலைமையில் அமைச்சா்கள், மொழிக் காவலா்கள், தமிழறிஞா்கள், தமிழ் அமைப்புகள், தமிழ் ஆா்வலா்கள், அரசு அலுவலா்கள் ஆகியோா் பங்கேற்கும் வகையில் விழா நடத்தலாம் எனவும், தமிழ் மொழிக்காகவும், தமிழகத்துக்காகவும் பாடுபட்டோருக்கு சிறப்பு செய்யும் வகையில் விழா நடத்தலாம் எனவும் இயக்குநரகம் கோரியிருந்தது.

தமிழ்மொழியின் சிறப்பை இனிவரும் இளைய தலைமுறையினா் அறிந்து கொள்ளும் வகையில் மாநில அளவில் கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், இளையோா் அரங்கம் ஆகியன நடத்தப்படலாம் எனவும், இந்த விழாவை நடத்திட ரூ.10 லட்சம் ஒப்புதல் அளிக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இதனை ஏற்று, நிகழ் நிதியாண்டில் தமிழ்நாடு நாள் என்ற பெயரில் விழாவைக் கொண்டாடுவதற்கு ரூ.10 லட்சம் நிதி ஒப்புதல் அளித்து அரசு உத்தரவிடுகிறது என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com