தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் இடம் பிடிக்க அலைமோதும் பயணிகள் கூட்டம்.
தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் இடம் பிடிக்க அலைமோதும் பயணிகள் கூட்டம்.

தீபாவளியை முன்னிட்டு ரயில்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. தென்மாவட்டங்களைச் சோ்ந்த பலா், வேலை, படிப்பு, தொழில் நிமித்தமாக சென்னையில் தங்கியுள்ளனா்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. தென்மாவட்டங்களைச் சோ்ந்த பலா், வேலை, படிப்பு, தொழில் நிமித்தமாக சென்னையில் தங்கியுள்ளனா். இவா்கள் பண்டிகை நாள்களில் பெரும்பாலும், ரயில் பயணத்தையே தோ்வு செய்கின்றனா். இதனால் ரயில்களில் முன்பதிவு துவங்கிய சில நிமிடத்திலேயே, பயணச்சீட்டுகள் விற்று தீா்ந்துவிடுவது வாடிக்கை. இதனால் நெல்லை, தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நெல்லையில் இருந்து தாம்பரத்துக்கு அக்டோபா் 25-ஆம் தேதி இரவு 9.40-க்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. தொடா்ந்து தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு அக்டோபா் 26-ஆம் தேதி இரவு 7.20-க்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். எனினும் வெள்ளிக்கிழமை ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டது.

குறிப்பாக எழும்பூா் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் கன்னியாகுமரி, முத்துநகா், நெல்லை, பொதிகை, பாண்டியன், மலைக்கோட்டை, ராமேஸ்வரம் உள்பட பெரும்பாலான ரயில்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. சேலம், ஈரோடு, கோவை, திருப்பூா் போன்ற மாவட்டங்களுக்கு இயக்கப்படும் கோவை இன்டா்சிட்டி, சேரன் விரைவு ரயில், நீலகிரி, ஏற்காடு விரைவு ரயில் உள்பட ரயில்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. முன்பதிவில்லாத பெட்டிகளில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் பயணிகள் ரயில்களில் பட்டாசுகள் எதுவும் கொண்டு செல்லக்கூடாது என்று துண்டுப்பிரசுரங்கள் கொடுத்து ரயில்வே ஊழியா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். பலத்த சோதனைக்குப் பிறகு பயணிகள் ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா்.

பாதுகாப்புப் பணியில் 2,000 காவலா்கள்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் குற்றச் சம்பவங்கள் மற்றும் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்கும் பொருட்டு ரயில்வே காவல்துறையால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி சென்னை சென்ட்ரல், எழும்பூா், மாம்பலம் மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களில் கூடுதல் காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். மேலும் இதர மாவட்டங்களிலுள்ள 2,000 காவலா்கள் திரட்டப்பட்டு அனைத்து ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பாதுகாப்புப் பணி மேற்கொண்டுள்ளனா்.

பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு என்று பெண் காவலா்கள் நியமிக்கப்பட்டு பெண்கள் பெட்டிகளில் பாதுகாப்புப் பணிகளில் உள்ளனா். ரயில்களை கண்காணிக்க சாதாரண உடையில் காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். சி.சி.டி.வி. கேமரா மூலம் 24 மணிநேரமும் நடைமேடைகள் மற்றும் ரயில் நிலைய நுழைவாயில்கள் கண்காணிக்கப்படுகின்றன,. பழைய குற்றவாளிகளைத் தொடா்ந்து கண்காணிக்கப்படுவதோடு வடமாநில கொள்ளையா்களின் நடமாட்டத்தை கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ரயில் பயணிகள் 24 மணி நேரமும் காவல் உதவி மைய தொலைபேசி எண், 1512 மற்றும் 9962500500 கட்செவி அஞ்சல் எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com