6.3 மீட்டர் வரை துளையிடப்பட்டுள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!

ரிக் வாகனம் மூலம் இதுவரை 6.3 மீட்டர் வரை தோண்டப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
6.3 மீட்டர் வரை துளையிடப்பட்டுள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!


ரிக் வாகனம் மூலம் இதுவரை 6.3 மீட்டர் வரை தோண்டப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில், பிரிட்டோ ஆரோக்கியராஜ் - கலா மேரியின் 2 வயது குழந்தை சுஜித் வில்சன் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. அந்தக் குழந்தையை மீட்கும் பணி கடந்த 43 மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஆழ்துளை கிணறு மூலம் குழந்தையை மீட்பதற்காக எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில், தற்போது அதற்கு அருகே மற்றொரு குழியைத் தோண்டி குழந்தையை மீட்பதற்கானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அங்கு குழி தோண்டுவதற்காக ரிக் வாகனம் வரவழைக்கப்பட்டு குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. அங்கு, சுமார் 40 அடி தூரம் வரை பாறை இருப்பதால் ரிக் வாகனம் மூலம் துளையிடுவதில் சற்று தாமதம் ஏற்படுவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

"ரிக் வாகனம் மூலம் துளையிடும் பணி நடைபெற்று வருகிறது. குழந்தை மேற்கொண்டு ஆழத்துக்குச் சென்றுவிடாமல் இருப்பதற்காக 27 அடியில் ஏர் லாக் மூலம் குழந்தையின் கை பிடித்து வைக்கப்பட்டுள்ளது.

குழந்தை 88 அடி ஆழத்தில் இருக்கும் நிலையில், தற்போது 21 அடி வரை தோண்டப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி தொடர்ந்து கேட்டறிந்து வருகிறார்.

கடினமான பாறைகள் இருப்பதால் துளையிடுவதில் சற்று சிரமம் ஏற்பட்டுள்ளது. அதேசமயம், தற்போது உள்ள ரிக் இயந்திரத்தை விட 3 மடங்கு வேகம் கொண்ட மற்றொரு ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் எவ்வித அதிர்வும் ஏற்படாமல் இருப்பதற்காக குழி தோண்டும் பணியை துரிதமாக செய்ய முடியவில்லை. இருந்தபோதிலும், மீட்புப் பணிகள் எவ்வித தொய்வும் இன்றி நடந்து வருகிறது" என்றார்.

இதையடுத்து, அமைச்சர் விஜயபாஸ்கர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில்,

"குழந்தையின் விரல்களைத் தொடர்ந்து பார்க்க முடிகிறது. ஆனால், குழந்தையிடம் எவ்வித அசைவையும் பார்க்க முடியவில்லை. குழந்தை நினைவிழந்த நிலையில் இருக்கலாம்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com