போராட்டம் தொடர்ந்தால்.. இன்றே புதிய மருத்துவர்களின் நியமனம் தொடங்கும்: அமைச்சர் விஜயபாஸ்கர்

அரசு மருத்துவர்களின் போராட்டம் தொடர்ந்தால், அவர்களது பணியிடங்கள் காலியானதாக அறிவிக்கப்பட்டு, புதிய மருத்துவர்களின் நியமனம் இன்றே தொடங்கும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
விஜயபாஸ்கர் எச்சரிக்கை
விஜயபாஸ்கர் எச்சரிக்கை


சென்னை: அரசு மருத்துவர்களின் போராட்டம் தொடர்ந்தால், அவர்களது பணியிடங்கள் காலியானதாக அறிவிக்கப்பட்டு, புதிய மருத்துவர்களின் நியமனம் இன்றே தொடங்கும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவர்களின் போராட்டம் குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது, அரசு மருத்துவர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு மக்களின் நலன் கருதி பணிக்குத் திரும்ப வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

இந்த வேண்டுகோளை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மருத்துவர்களில், 1550 பேர் அரசின் வேண்டுகோளை ஏற்று இன்று பணிக்குத் திரும்பி வருகைப் பதிவில் கையெழுத்திட்டுள்ளனர்.

இது இன்று முற்பகல் 12 மணி வரை நிலவரம். அரசு மருத்துவர்கள் பணிக்குத் திரும்ப இன்று 2 மணி வரை கால அவகாசம் உள்ளது. அரசு மருத்துவர்கள் இன்று பிற்பகல் 2 மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று அரசு காலக்கெடு விதித்துள்ளது. எனவே மேலும் பல மருத்துவர்கள் பணிக்குத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இதையெல்லாம் மீறி சுமார் 15,000 மருத்துவர்கள் போராட்டத்தில ஈடுபட்டுள்ளனர், 17 ஆயிரம் பேர் போராடுகிறார்கள் என்றெல்லாம் சொல்வது மிகவும் தவறு.

ஏழை, எளிய மக்களின் சிகிச்சை பாதிக்கப்படக் கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. எனவே, போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பிய மருத்துவர்களுக்கு அரசு சார்பில், பொதுமக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே சமயம், மருத்துவமனை வாயிலை அடைத்தபடி மருத்துவர்கள் அமர்ந்து போராடுவது சரியல்ல. மருத்துவமனை போராட்ட களமல்ல என்பதையும் இங்கே குறிப்பிடுகிறேன்.

பொதுமக்கள் செலுத்தும் வரிப் பணத்தில் ஒரு கோடியே 24 லட்சம்  செலவிட்டுத்தான் ஒரு மருத்துவரை உருவாக்குகிறோம். எனவே மக்கள் பணியாற்ற நீங்கள் முன்வர வேண்டும். நீங்கள் வைக்கும் கோரிக்கைகளை அரசு கனிவோடு பரிசீலிக்கத் தயாராக இருக்கிறது.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சுமார் 50 மருத்துவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இன்றைக்குள் போராட்டத்தைக் கைவிட்டு மருத்துவர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும். அவ்வாறு திரும்பவில்லை என்றால், அவர்களது பணியிடங்கள் காலிப் பணியிடங்கள் என அறிவிக்கப்படும். அந்த காலிப் பணியிடங்களில் புதிய மருத்துவர்களை நியமிக்கும் பணி இன்றே தொடங்கும். கொடுத்த காலக்கெடுவுக்குள் மருத்துவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com