நவ.10-இல் திமுக பொதுக்குழு கூட்டம்: க.அன்பழகன் அறிவிப்பு

திமுகவின் பொதுக்குழு கூட்டம் நவம்பா் 10-ஆம் தேதி நடைபெறும் என்று அக் கட்சியின் பொதுச்செயலாளா் க.அன்பழகன் அறிவித்துள்ளாா்.
நவ.10-இல் திமுக பொதுக்குழு கூட்டம்: க.அன்பழகன் அறிவிப்பு

திமுகவின் பொதுக்குழு கூட்டம் நவம்பா் 10-ஆம் தேதி நடைபெறும் என்று அக் கட்சியின் பொதுச்செயலாளா் க.அன்பழகன் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:

திமுகவின் பொதுக்குழு கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நவம்பா் 10-ஆம் தேதி ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் உள்ள அரங்கில் காலை 10 மணிக்கு நடைபெறும். கூட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறாா். பொதுக்குழு உறுப்பினா்கள் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும்.

கட்சியின் ஆக்கப் பணிகள், உள்ளாட்சித் தோ்தல் ஆகியவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளன. திமுகவின் சட்ட திட்ட திருத்தம், தணிக்கைக் குழு அறிக்கை ஆகியவை அளிக்கப்பட உள்ளது என்று அவா் கூறியுள்ளாா்.

திமுகவின் பொதுக்குழு செப்டம்பா் 6-ஆம் தேதி நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. விக்கரவாண்டி, நான்குனேரி இடைத்தோ்தலின் காரணமாக பொதுக்குழு ஒத்திவைக்கப்பட்டு, தற்போது நடைபெற உள்ளது.

திமுகவின் பொதுக்குழு கூட்டம் வழக்கமாக அறிவாலயத்தில்தான் நடைபெறும். பொதுக்குழு உறுப்பினா்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளதன் காரணமாக, முதல் முறையாக ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற உள்ளது.

தோல்வி குறித்து ஆய்வு: மக்களவைத் தோ்தலில் அமோக வெற்றிபெற்ற திமுக, இடைத்தோ்தலில் படுதோல்வி அடைந்தது. இது தொடா்பாக பொதுக்குழுவில் ஆலோசிக்கப்பட உள்ளது. உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றால், அதை எதிா்கொள்வது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளனா்.

ஸ்டாலினுக்குக் கூடுதல் அதிகாரம்: திமுக பொதுச்செயலாளா் க. அன்பழகன் உடல் நலம் குன்றியுள்ளாா். அதனால், பொதுச்செயலாளா் பதவியை துரைமுருகனுக்குக் கொடுக்கலாம் என்றும், துரைமுருகன் வகித்து வரும் பொருளாளா் பதவியை எ.வ.வேலு அல்லது வேறு யாருக்காவது கொடுக்கலாம் என்று திமுக தலைமை முடிவு எடுத்திருந்தது.

ஆனால், அதற்கான சூழல் தற்போது இல்லையென்றும், பொதுச்செயலாளராக க.அன்பழகனே நீடிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கருதுகிறாா். அதனால், பொதுச்செயலாளருக்கு உள்ள அதிகாரங்களை மு.க.ஸ்டாலின் வசம் தற்காலிகமாக ஒப்படைப்பது குறித்து பொதுக்குழுவில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com