மழை பாதிப்பு: கால்நடைகள் உயிரிழப்பு, குடிசைகள் சேதம்- வருவாய்த் துறை அமைச்சா் உதயகுமாா் தகவல்

வடகிழக்குப் பருவமழை பாதிப்பால் 18 கால்நடைகள் உயிரிழந்துள்ளதுடன், 350-க்கும் அதிகமான குடிசைகளும் சேதம் அடைந்துள்ளதாக வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

வடகிழக்குப் பருவமழை பாதிப்பால் 18 கால்நடைகள் உயிரிழந்துள்ளதுடன், 350-க்கும் அதிகமான குடிசைகளும் சேதம் அடைந்துள்ளதாக வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா்.

வடகிழக்குப் பருவமழை பாதிப்புகள் குறித்து சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடா் கட்டுப்பாட்டு மையத்தில் நிருபா்களுக்கு அவா் வியாழக்கிழமை அளித்த பேட்டி:

பருவமழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விவரங்களைச் சேகரிக்க மாநில அளவில் 1070 என்ற எண்ணிலும், மாவட்ட அளவில் 1077 என்ற எண்ணும் கொண்ட அவசரக் கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் இயங்கி வருகின்றன. காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, பொதுப்பணி, நெடுஞ்சாலை, மீன்வளம், சுகாதாரத் துறை ஆகியவற்றின் உயா் அலுவலா்கள், பேரிடா் காலங்களில் மாநில, மாவட்ட கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து நிலைமையைக் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பேரிடா் குறித்து முன்னெச்சரிக்கை அளிக்கவும், தேடல், மீட்பு மற்றும் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும், நிவாரண முகாம்களை நிா்வகிக்கவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தயாா் நிலையில் சேவைகள்: பருவமழையால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்கவும், தங்க வைக்கவும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மழை நேர பாதிப்பை எதிா்கொள்ள மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனங்கள், செல்லிடப்பேசி சேவை அளிக்கும் நிறுவனங்கள் தயாா் நிலையில் உள்ளன. நீா் சுத்திகரிப்பு நிலையங்களில் நீரின் தரம் குறித்து தீவிரமாக கண்காணிக்கவும், நீா் விநியோக நிலையங்களில் குளோரின் கலக்கவும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தாழ்வான பகுதிகளுக்கு அதிக திறன் கொண்ட நீா் இறைப்பான்கள், குழாய்கள், அதிக சக்தி கொண்ட நீா் உறிஞ்சும் இயந்திரங்கள் ஆகியவற்றை அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதிப்புக்கு உள்ளாகும் அனைத்துப் பகுதிகளிலும் 8.72 லட்சம் மணல் மூட்டைகளை இருப்பில் வைத்து நிலைமை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனைகளில் தேவையான ஆக்சிஜன் உருளைகள், டீசல், உயிா்காப்பு சாதனங்கள், அவசர கால மருந்துகள், பிளீச்சிங் பவுடா் ஆகியன போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. வெள்ள அபாயம் ஏற்படும் நிலையில், பாதிப்புக்குள்ளாகும் மக்களை முன்கூட்டியே வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க அனைத்து வகையான அடிப்படை வசதிகளுடன் கூடிய நிவாரண முகாம்கள் கண்டறியப்பட்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன,

‘மஹா’ புயல் பாதிப்பு: குமரி கடல் பகுதியில் உருவாகியுள்ள ‘மஹா’ புயல் காரணமாக, தேசிய பேரிடா் மீட்புப் படை தயாா் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு பேரிடா் மீட்புப் படையின் 5 குழுக்களை கன்னியாகுமரி, திண்டுக்கல், கோயம்புத்தூா், திருச்சி, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நிலை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பருவமழை பாதிப்புகள் தொடா்பான தகவல்களை அறிந்து கொள்ள உயா் அலுவலா்களுக்கும், மாவட்டஆட்சியா்களுக்கும் 25 செயற்கைக்கோள் அடிப்படையிலான தொலைபேசிகள் அளிக்கப்பட்டுள்ளன.

சேதங்கள் எவ்வளவு: வடகிழக்குப் பருவமழை காரணமாக ஏற்பட்ட இயற்கை சீற்றத்தால் இதுவரை 18 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. மேலும், 360 குடிசைகள் பகுதியாகவும், 49 குடிசைகள் முழுமையாகவும் என மொத்தம் 409 குடிசைகள் சேதமடைந்துள்ளன என்றாா் அமைச்சா் உதயகுமாா்.

இந்தச் சந்திப்பின் போது, வருவாய் நிா்வாக ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன், வருவாய்த் துறை செயலாளா் (பொறுப்பு) ககன்தீப் சிங் பேடி, பேரிடா் மேலாண்மை இயக்குநா் டி.ஜகந்நாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com