கிருமித் தொற்றைத் தடுக்கும் நவீன வசதி: கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் விரைவில் தொடக்கம்

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் தீக்காய சிகிச்சைப் பிரிவில் அதிநவீன லேமினார் ஃப்ளோ வசதிகள் செய்யப்பட்டுள்ளன.


கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் தீக்காய சிகிச்சைப் பிரிவில் அதிநவீன லேமினார் ஃப்ளோ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விரைவில் அவை பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த வசதிகளின் மூலம் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் பரவுவதை 100 சதவீதம் தடுக்க முடியும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
பொதுவாக அறுவை சிகிச்சைக் கூடங்கள், குறிப்பிட்ட சில தீவிர சிகிச்சைப் பிரிவுகள் ஆகியவற்றில் மட்டுமே லேமினார் ஃப்ளோ வசதிகள் செய்யப்பட்டிருக்கும்.
காற்றில் பரவும் தொற்றுகளை முழுமையாக வடிகட்டுவதற்கும், கிருமிகள் நிறைந்த சூழலைக் கூட சுகாதாரமாக மாற்றுவதற்கும் அவை பயன்படுத்தப்படுகின்றன. அதற்கான கட்டமைப்பை ஏற்படுத்த அதிக செலவாகும் என்பதால் சாதாரணமான சிகிச்சைப் பிரிவுகளில் அவ்வசதி செய்யப்படுவதில்லை.
இந்நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் செயல்படும் இருவேறு தீக்காய சிகிச்சைப் பிரிவுகளிலும் லேமினார் ஃப்ளோ வசதி செய்ய முடிவு செய்யப்பட்டது. 
அதன் மூலம் தீக்காயமடைந்தவர்களுக்கு பிறரிடமிருந்து நோய்த் தொற்று ஏற்படாமல் தடுத்து அவர்களின் உயிரைக் காக்க முடியும். இதையடுத்து, ரூ.2.5 கோடி செலவில் அதற்கான கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளது. 
இதுகுறித்து மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் வசந்தாமணி கூறியது:
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தீக்காய சிகிச்சைகளுக்கு பெயர் பெற்றது. அதிநவீன சிகிச்சை முறைகள் மூலமாக தீ விபத்தில் சிக்கியவர்களை இயன்ற வரை குணப்படுத்தி வருகிறோம். பொதுவாக  தீக்காயமடைந்தவர்களுக்கு பாக்டீரியா தொற்று ஏற்பட்டால், அது உயிரிழப்புக்கு வழி வகுக்கும். சிகிச்சை பலனின்றி இறப்பவர்களில் 5 சதவீதம் பேர் அதுபோன்ற தொற்றால் பாதிக்கப்பட்டவர்களே. அதைக் கருத்தில் கொண்டே லேமினார் ஃப்ளோ கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com