கோவை ரயில் நிலையத்தில் ரயில் பெட்டி எரிந்து  சேதம்: பாதுகாப்புப் படையினர்  விசாரணை

கோவை ரயில் நிலையத்தில் உள்ள பணிமனையில் பராமரிப்புப் பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டி ஒன்று முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது  தொடர்பாக ரயில்வே பாதுகாப்புப் படையினர் தீவிர
கோவை ரயில் நிலைய பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த பெட்டியில் தீப்பிடித்து எரிந்து சேதமான இருக்கைகள். 
கோவை ரயில் நிலைய பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த பெட்டியில் தீப்பிடித்து எரிந்து சேதமான இருக்கைகள். 


கோவை ரயில் நிலையத்தில் உள்ள பணிமனையில் பராமரிப்புப் பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டி ஒன்று முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது  தொடர்பாக ரயில்வே பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 
நாகர்கோயில் - கோவை வழித்தடத்தில் பயணிகள்  விரைவு ரயில் திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர் வழியாக தினமும் இயக்கப்பட்டு வருகிறது. 
இந்த ரயில் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் வரும்போது, தூத்துக்குடி - கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் ரயிலின் 2 ஏ.சி. பெட்டிகள் உள்பட 10 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டு அதன் பிறகு ஈரோடு வழியாக கோவை வந்தடைகிறது. 
இந்த ரயில், நாகர்கோயிலில் இருந்து புறப்பட்டு திங்கள்கிழமை காலை 7.30 மணிக்கு கோவை வந்தடைந்தது. கோவை ரயில் நிலையத்தில் பயணிகள் இறங்கிச் சென்ற பிறகு ரயிலின் பெட்டிகளை பராமரிப்புப் பணிக்காக நிலையத்தில் உள்ள பணிமனையில் கொண்டு சென்று நிறுத்தினர். அப்போது  பி 1 ஏ.சி. பெட்டியில் இருந்து திடீரென புகை  வெளியே வந்தது. இதைப் பார்த்த பணிமனை ஊழியர்கள், அருகில் சென்று பார்த்தபோது, பெட்டியில் தீப்பற்றி எரிவது தெரிந்தது. இதில் பெட்டியில் இருந்த 64 இருக்கைகளும் முழுவதுமாக எரிந்து சேதமாயின. ரயில்வே ஊழியர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அரை மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு தீ முழுவதும் அணைக்கப்பட்டது. நின்றிருந்த காலிப் பெட்டியில் தீவிபத்து ஏற்பட்டது குறித்து ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 
இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது: 
பயணிகளை இறக்கி விட்ட பிறகு, 21 பெட்டிகளையும் சுத்தம் செய்யவும், வழக்கமான பராமரிப்புப் பணிக்காகவும் பணிமனைக்கு ரயில் பெட்டிகள் கொண்டு வரப்பட்டிருந்தன. அதில்,  பி 1 ஏ.சி. பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. அந்தப் பெட்டியில் இருந்த இருக்கை விரிப்புகள், இருக்கைகள் முற்றிலும் எரிந்துவிட்டன. நிறுத்தப்பட்டிருந்த அந்தப் பெட்டியில் பேட்டரிகள் முழுவதும் அணைக்கப்பட்டிருந்ததால், மின் கசிவால் விபத்து ஏற்பட வாய்ப்பில்லை. இதனால், மர்ம நபர்கள் தீ வைத்தனரா அல்லது யாராவது புகை பிடித்ததால் 
தீ விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com