புதுவை பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மான விவகாரம்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

 புதுவை சட்டப் பேரவைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்காக எதிர்க்கட்சித் தலைவர்
புதுவை சட்டப் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள்.
புதுவை சட்டப் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள்.


 புதுவை சட்டப் பேரவைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் அளித்த கடிதம் திருப்பி அனுப்பப்பட்டதைக் கண்டித்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேரவையில் இருந்து செவ்வாய்க்கிழமை வெளிநடப்பு செய்தனர்.
புதுவை சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பட்ஜெட் விவாதத்தின் போது, முதல்வர் நாராயணசாமி பதில் அளித்துப் பேசிக்கொண்டு இருந்தார். 
இதனிடையே, குறுக்கிட்ட அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் குழுத் தலைவர் ஆ.அன்பழகன், பேரவைத் தலைவர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் எப்போது விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது என்று கேள்வி எழுப்பினார். அப்போது நடைபெற்ற விவாதம்:
பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து: எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி அளித்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பான கடிதம் முறையாக இல்லை என்பதால், அந்தக் கடிதத்தை அவருக்கு திருப்பி அனுப்பிவிட்டோம்.
அன்பழகன்: எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்பட்ட பிற தீர்மானங்கள் அவையில் எடுத்துக்கொள்ளப்படுமா?.
சிவக்கொழுந்து: அந்த மனுக்களை ஆய்வு செய்ய போதிய கால அவகாசம் உள்ளது.
அன்பழகன்: சட்டப் பேரவை விதிகளுக்கு மாறாக பேரவைக் கூட்டம் நடத்தப்படுகிறது. எனவே, பேரவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்கிறோம். 
இதையடுத்து, அதிமுக, என்.ஆர். காங்கிரஸ் மற்றும் நியமன எம்எல்ஏக்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் குழுத் தலைவர் ஆ.அன்பழகன் கூறியதாவது: புதுவை சட்டப் பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்காக 
கடிதம் அளித்தும், இதுவரை அதற்குரிய பதிலை பேரவையில் ஆளும் கட்சியினர் அளிக்கவில்லை. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொள்ளாத இந்த அரசு, தொடர்ந்து மழுப்பலான பதிலைக் கூறி வருகிறது. இது தொடர்பாக கேள்வி எழுப்பியும் உரிய பதில் இல்லை. எனவே, இந்தச் செயலைக் கண்டித்து, அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ், நியமன எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com