ஊழல் செய்த எதிர்க்கட்சியினர் கைது செய்யப்படுவர்: எச்.ராஜா

ஊழல் செய்த எதிர்க்கட்சியினர் கைது செய்யப்படுவார்கள் என பாஜக தேசியச் செயலர் எச்.ராஜா தெரிவித்தார்.
ஊழல் செய்த எதிர்க்கட்சியினர் கைது செய்யப்படுவர்: எச்.ராஜா

ஊழல் செய்த எதிர்க்கட்சியினர் கைது செய்யப்படுவார்கள் என பாஜக தேசியச் செயலர் எச்.ராஜா தெரிவித்தார்.
 விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, சேலத்தில் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
 இதன்படி, சேலம் அரசு கலைக் கல்லூரி அருகில் உள்ள எல்லைப்பிடாரி அம்மன் கோயில் வளாகத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கன்னங்குறிச்சி மூக்கனேரி பகுதியில் விசர்ஜனம் செய்யப்பட்டன. இந்த ஊர்வலத்தைத் தொடக்கிவைத்து, எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியது:-
 முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் போன்று இன்னும் பல எதிர்க்கட்சித் தலைவர்கள் ஊழல் முறைகேடு வழக்குகளில் கைது செய்யப்படுவார்கள். ப.சிதம்பரம் மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியில் ஊழல் செய்த நிறைய தலைவர்கள் அடுத்தடுத்து கைது ஆவார்கள்.
 ரஜினிகாந்த் பெயரை பயன்படுத்துவது தவறு: தமிழகத்தின் மிகப் பெரிய ஆளுமை நடிகர் ரஜினிகாந்த். அவரது அனுமதி இல்லாமல், விருப்பம் இல்லாமல் தமிழக பாஜகவின் அடுத்த தலைவராக ரஜினிகாந்த் தான் வருவார் என்று கூறுவது அநாகரிகமானது.
 பியூஸ் மானுஷ் மீது நடவடிக்கை தேவை: சேலம் பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்துக்குள்ளே நுழைந்த பியூஸ் மானுஷை குண்டர் தடுப்புச் சட்டத்தில் போலீஸார் கைது செய்ய வேண்டும் என்றார்.
 ஊர்வலத்தில் பாஜக மாநகர மாவட்டத் தலைவர் ஆர்.பி.கோபிநாத், இந்து முன்னணி நிர்வாகி சந்தோஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 இந்து மதத்தை இழிவுப்படுத்திநால் போராட வேண்டும்: இந்து மதத்தை இழிவுப்படுத்தினால் வீதிக்கு வந்து போராட வேண்டும் என்று பாஜக தேசியச் செயலர் ஹெச்.ராஜா கூறினார்.
 விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பாஜக, இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை நீர்நிலைகளை கரைக்க எடுத்துச் செல்லும் விசர்ஜன ஊர்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
 வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே ஊர்வலத்தைதத் தொடங்கி வைத்து ராஜா பேசியது:-
 ஆகாயத்தில் இருந்து விழும் மழை நீர் கடலில் போய் சேரும் என்பதை போல, "நீ எந்த ஆண்டவனை வணங்கினாலும், இறுதியாக நாராயணனை அடைவாய்' என்பர் நம் முன்னோர்கள். வழிபாட்டில் வேறுபாடு பார்க்காத பண்பாடு, கலாசாரத்தைக் கொண்டது இந்துமதம் மட்டும் தான்.
 அத்திவரதரை அண்மையில் ஒரு கோடி பேருக்கும் மேல் சென்று தரிசித்தனர். பக்தி வேறு, சமூக உணர்வு வேறு. நான் பொதுவாழ்க்கையில் இருப்பதே, இந்து சமுதாயத்தில் சமூக உணர்வை கொண்டு வருவதற்குத்தான். எனக்கு பதவி முக்கியமல்ல. இந்து மதத்தை யாராவது இழிவுப்படுத்தினால், நாம் வீதிக்கு சென்று போராட வேண்டும். இந்து விரோத நிர்வாகத்தை உடைத்தெறிய வேண்டும். அரசியல் வாழ்க்கையில் நான் விமர்சனம் செய்யாத ஒரே தலைவர் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். மட்டும்தான். ஒரு முறை மதுரை கோயிலுக்கு சென்றிருந்த அவரிடம், "போர் படையெடுப்பில் சேதப்படுத்தி விடுவார்கள் என்பதால் மீனாட்சி அம்மனையும், சுந்தரேஸ்வரரையும் புதைத்து வைத்துள்ளோம். 13 ஆண்டுகளாகப் பூஜை நடக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். இதைக்கேட்ட எம்.ஜி.ஆர்., இதை ஏன் பாடத் திட்டத்தில் சேர்க்கவில்லை? இந்த வரலாறு மக்களுக்கு தெரியும்படி எழுதி வையுங்கள்' என்றார்.
 உலகத்திலேயே அடுத்த நாடு மீது படையெடுக்காத பண்பாடு, கலாசாரம் கொண்டு ஒரே நாடு இந்தியா தான். நாம் ஆன்மிகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். நாடு பிடிப்பதில் நம்பிக்கை கிடையாது. ஆனால், நமது உரிமைக்காக குரல் கொடுத்தே ஆக வேண்டும். கையில் கயிறு கட்டக்கூடாது, நெற்றில் திலகமிடக் கூடாதென்று அதிகாரிகள் யாராவது சொன்னால் நாம் அதை எதிர்த்துப் போராட வேண்டும் என்றார்.
 இந்து முன்னணி மாவட்டச் செயலர் ஜெயராமபிரசாத், பா.ஜ.க. நிர்வாகிகள் மாணிக்கம், வழக்குரைஞர் மணிகண்டன், சண்முகநாதன், வெங்கடாஜலம், ஆடிட்டர் குப்பமுத்து, பொன்.பழனிசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com