குரங்கணியில் மலையேற்றப் பயிற்சிக்கு இன்றுமுதல் மீண்டும் அனுமதி

தேனி மாவட்டம் போடி குரங்கணியில் மலையேற்றப் பயிற்சிக்கு வியாழக்கிழமை (செப். 5) முதல் வனத்துறை மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது.
தீ விபத்தில் சிக்கிய கொழுக்குமலை ஒத்தை மரம் பகுதி
தீ விபத்தில் சிக்கிய கொழுக்குமலை ஒத்தை மரம் பகுதி


தேனி மாவட்டம் போடி குரங்கணியில் மலையேற்றப் பயிற்சிக்கு வியாழக்கிழமை (செப். 5) முதல் வனத்துறை மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது.
 இங்குள்ள கொழுக்குமலை பகுதி வழியாக குரங்கணிக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு மார்ச் 11-ஆம் தேதி மலையேற்றப் பயிற்சிக்காக வந்த திருப்பூர், ஈரோடு, சென்னையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 23 பேர் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தனர். இதனையடுத்து மலையேற்றப் பயிற்சிக்கு தடை விதிக்கப்பட்டது. 
இந்த விபத்தை தொடர்ந்து, தமிழக அரசின் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மை செயலராக இருந்த அதுல்ய மிஸ்ரா தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. அவரது பரிந்துரையின் பேரில் மலையேற்ற பயிற்சிக்கான புதிய விதிகள் வகுக்கப்பட்டன. தமிழ்நாடு வனம் மற்றும் வன விலங்குகள் (மலையேற்ற ஒழுங்குபடுத்துதல்) விதிகள் 2018-ன் கீழ் மலையேற்றப் பயிற்சி மேற்கொள்ள மாவட்ட வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் மலையேற்றப் பயிற்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் சில நாள்களிலேயே மீண்டும் தடை விதிக்கப்பட்டது. இதனால் இப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மலையேற்றப் பயிற்சி மேற்கொள்ளாமல் இருந்தனர். இதனிடையே தற்போது மீண்டும் இப்பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேனி மாவட்ட வனத்துறை புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: போடி வனச்சரகத்துக்குள்பட்ட குரங்கணி முதல் டாப்- ஸ்டேசன் வரையிலான மலையேற்றப் பயிற்சிக்கு தீப்பற்றக்கூடிய காலத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது 5.9.2019 (வியாழக்கிழமை) முதல் இந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டு மீண்டும் மலையேற்றப் பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
 மேலும் மலையேற்றம் மேற்கொள்ளும் நபர்கள் புதிய விதிகளின்படி தேனி மாவட்ட வன அலுவலகத்தில் முறையாக விண்ணப்பித்து, அனுமதி வழங்கப்பட்ட பின்னரே மலையேற்றப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். மேலும் மலையேற்றப் பயிற்சி மேற்கொள்பவர்கள் குரங்கணியில் மட்டும் அனுமதிக்கப்பட்ட இடத்தில் தங்க வைக்கப்படுவார்கள். டாப்- ஸ்டேசன், சென்ட்ரல் ஸ்டேசன் ஆகிய இடங்களில் தங்குவதற்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  இதனிடையே முதுவாக்குடி சூழல் சுற்றுலா மேலாண்மைக் குழு சார்பில் மலையேற்றப் பயிற்சிக்கான வழிகாட்டிகளும் மலையேற்றம் மேற்கொள்வோருக்கு உதவ தயார் நிலையில் உள்ளனர். மலையேற்ற பயிற்சிக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் மலையேற்றப் பயிற்சி மேற்கொள்வோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 மலையேற்ற பயிற்சி மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகள் (கோப்புப் படம்)  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com